ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு புளொட் ஆதரவு!!

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே தமிழைரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது புளொட்டும் சஜித்தை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்து அதில் உறுதியாக உள்ளோம். இது ஒரு மாதத்துக்கும் முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம்.

அதாவது, நாம் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவரை ஆதரிப்பது, அதில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதே சரியான தெரிவு என்பதை நாம் கூறிவிட்டோம். இப்போதும் நாம் அந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளோம்.

எமது நோக்கம் என்னவெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளருடன் நிற்க வேண்டும் என்பதே. அதில் எமது தலைமைகள் தனித்தனி தீர்மானம் எடுக்க வேண்டியதில்லை. கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை வெளிப்படுத்தியிருந்தால் இன்னமும் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும்.

எவ்வாறு இருப்பினும் இப்போதும் நாம் ஒற்றுமையாக தமிழ் மக்களின் நலன்களை கவனத்திற்கொள்ள வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு” என தெரிவித்துள்ளார்.

Related Posts