ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
முக்கியமான இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை முன்னெடுக்காமல் தீர்வுத்திட்ட நடவடிக்கைகளுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கிழக்கில் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் மத்தியில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அழைப்பை விடுத்தார்.
களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை திறந்துவைக்கும் பொருட்டு இந்த நிகழ்வு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கட்டத்தொகுதி இரத்தவங்கி நவீன சத்திரசிகிச்சை கூடம் சட்ட வைத்தியபிரிவு கதிர்வீச்சு பிரிவு நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைபெறுவதற்கான வசதி மற்றும் நிர்வாகப்பிரிவு ஆகியவற்றைக்கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
களுவாஞ்சிக்குடியில் அழகிய மருத்துவ மனையை நிர்மாணித்த அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் நிதியுதவி வழங்கிய ஜப்பானிய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் எமது நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தொவித்துக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவருமான இரா.சம்பந்தன் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
நிலையான அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு மற்றும் வறுமையொழிப்பு செயற்றிட்டங்களை மிக நேர்த்தியாக அவர் முன்னெடுத்து வருகின்றார். இந்த நடவடிக்கைகள் வெற்றிபெற வேண்டம்.அதற்காக நாம் வாழ்த்துவதுடன் பிரார்த்திக்கின்றோம் என்றும் கூறினார்.
களுவாஞ்சிக்குடி தொடர்பான அன்றைய நினைவுகளை குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் அன்று பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இராசமாணிக்கம் செயற்பட்டார். 1961ம் ஆண்டு நாட்டின் ஆட்சியை முடக்குவதற்காக நாம் வடக்கு கிழக்கில் பாரிய சத்தியாக்கிரகமொன்றை நடத்தினோம்.மட்டக்களப்பில் அரச அதிபரும் அதிகாரிகளும் கச்சேரிக்குச் செல்ல முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தினோம்.
இதனால் நாங்கள் கைது செய்யப்பட்டு பனாகொடை முகாமில் தடுத்து வைக்கப்பட்டோம். அங்கு நான் இருந்த அறையில் ராஜவரோதயன் இராசமாணிக்கம், மாணிக்கவாசகர் ஆகியோரும் இருந்தனர். எனக்கு அப்போது வயது 28. இளம் சட்டத்தரணியாக பணியாற்றிய காலம் அது.
நாங்கள் உரிமைக்காக தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி வருகின்றோம். இன்று பேச்சுவார்த்தை மூலம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அந்த அரசியல் யாப்பு ஊடாக பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான நியாயமான தீர்வினைக்கண்டு இந்த நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் சமத்துவத்தின் அடிப்படையில் ஒரு சமாதானத்தை ஏற்படுத்தவே விரும்புகின்றோம்.ஆனால் புதிய அரசியலமைப்பு ஊடாக நாங்கள் பிரிவினையை ஏற்படுத்த முனைகின்றோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது தவறான கருத்தாகும்.
அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும். பெரும்பான்மை சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும். அது பிரிக்கப்படாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இந்த பணியில் மஹிந்த ராஜபக்ஸவும் இணைந்துகொள்ளவேண்டும். அவருக்கும் பொறுப்ப உண்டு இதனால் இங்கு நான் அவருக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் தவறான கருத்துகளை பரப்பாமல் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தாமல் மக்களை ஒற்றுமைப்படுத்தி 70 வருடமாக இந்த நாட்டில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை காண்பதற்கு உதவ வேண்டும். அது அவரின் புனிதமான கடமை. என்றும் எதிர்க்கட்சத்தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.