ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு நியமனம்!

mahinda_rajapaksaகாணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்று நிபுணர்களை நியமித்துள்ளார்.

இந்த மூவரடங்கிய நிபுணர் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சேர் டெஸ்மன்ட் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதிப் பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர ஜனாதிபதி சட்டத்தரணி சேர் ஜெப்றி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோரும் இந்த ஆணைக்குழுவிற்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.

குழுவின் தலைவர் டெஸ்மன் த சில்வா சர்வதேச அங்கீகாரம் பெற்ற இலங்கை சட்டத்தரணியாவார் என்பதோடு, சியாராலியோனின் போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கான ஐ.நா. வின் முன்னாள்; பிரதம வழக்குரைஞருமாவார்.

சேர் ஜெப்ரி நைஸ், யூகோஸ்லாவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணி புரிந்தவராவார். ஓர் அமெரிக்க சட்டத்தரணியான பேராசிரியர் டேவிட் எம் கிரேன், 2002ஆம் ஆண்;டு ஏப்ரல் முதல் 2005 ஜூலை வரை சியாராலியானுக்கான விசேட நீதிமன்றத்தின் பிரதம வழக்குரைஞராவார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் கையொப்பத்தில் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்நாட்டு ஆயுத முரண்பாடு உருவானதற்கான காரணத்தை கண்டறிவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்கழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு, முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட அரசசார்பற்ற புனர்வாழ்வுக்கான நிகழ்ச்சித்திட்டம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தலுக்கான தேசிய செயற்பாட்டுத்திட்டம், மனித உரிமைகளின் ஊக்குவிப்புக்குமான தேசிய செயற்பாட்டுத்திட்டம், மனித உரிமைகளின் ஊக்குவிப்புக்கும் பாதுகாப்புக்குமான தேசிய செயற்பாட்டுத்திட்டம், இராணுவச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் உருவாக்கப்பட்ட விசாரணைக்கான நீதிமன்றங்கள் மற்றும் விசாரணைச் சபை போன்ற பல முன்னெடுப்புக்களை ஆரம்பித்துள்ளோம்.

மேற்கூறிய ஆரம்ப முன்னெடுப்புக்களைத் தொடர்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, மேற்படி முன்னெடுப்புக்களின் கீழ் உருவாக்கப்பட் நிறுவனப் பொறிமுறைகள், அரசாங்க

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் அதிசிறந்த முன்னேற்றம் எட்டப்பட்டு வருகின்றது.

அனுதாப உணர்வுகளினால் இலங்கையில் எல்லா மக்களிடையேயான தேசிய நல்லிணக்கம், சமாதானம், ஒத்திசைவு, ஆகியவற்றின் மீதான அதீத ஆர்வத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் ஆகியவற்றை பாதுகாத்துள்ளதோடு அவர்களை தேசிய வாழ்க்கையின் பொது நடைமுறைக்கு கொண்வந்துள்ளேன்.

ஆகையால், 3,500 இற்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் சிறுவர் சிப்பாய்களை அவர்களின் பெற்றோர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளோம்.

தங்களது கல்வியைப் பின்தொடர்வதற்கான வாய்ப்புக்களை வழங்கி இலங்கையின் சமாதானமான பிரஜைகளாக அவர்களது ஆற்றலைப் பூர்த்தி செய்யவும் நாட்டை அபிவிருத்தி செய்யவும் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார சவால்களுக்கு கூட்டாக அமைதியான தீர்வுகளைப் பெறவும் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்கள் பலரை பகிரங்கமாக வன்முறையை நிராகரித்து கைவிடவும் ஊக்குவித்ததோடு, ஜனநாயக சட்டகத்தின் கீழ் செயற்படத்துவதற்காக பொது நடைமுறை அரசியல் வாழ்வை ஏற்கச் செய்துள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் விசேடமாகவும் பொதுவாகவும் குறிப்பிடப்பட்டுள்ள மேலதிக விசாரணை தேவைப்படுகின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொதுமக்கள் நலனின் அக்கறையின் பேரில் மேற்கொள்ளப்பட வேண்டுமென்ற அபிப்பிராயத்தை நான் கொண்டிருக்கின்றேன்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய நான், விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் (393ஆம் அத்தியாயம்) 2ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையிட 2013, ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 1823ஃ42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் விடயப்பரப்பை இத்தால் விரிவாக்குகின்றேன்.

(அ) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் 4.359 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இதற்குத் தொடர்புடையதாய், ஆணைக்குழு இதன் பிரகாரம் பின்வரும் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையிட வேண்டுமென இத்தால் பணிக்கப்படுகிறது:

i. 2009, மே மாதம் 19ஆம் திகதியில் முடிவுற்ற உள்நாட்டு ஆயுத முரண்பாட்டில் பொதுமக்களின் உயிரிழப்புக்கு விதித்திட்ட பிரதான காரணங்களும் சூழ்நிலைகளும் யாராவது தனிநபரோ, குழுவோ அல்லது நிறுவனங்களோ நேரடியாக அல்லது மறைமுகமாக சர்வதேச மனிதாபிமான சட்டம் அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மீறல் அல்லது மீறல்கள் காரணமாக இதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளார்களாக என்பது பற்றியும்:

ii. அவ்வாறு பொதுமக்களின் உயிரிழப்பு ஆயுத முரண்பாடுகளின்போது இலக்கிடப்பட்ட இராணுவ நோக்கங்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற விகிதாசார தாக்குதல்;களின்போது ஏற்படக்கூடிய, அத்தோடு சர்வதேச மனிதாபிமான சட்டங்களில் அங்கிகரிக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த சேதங்களை உள்ளடக்குவதற்கான அளவைக் கொண்டுள்ளதா, அத்தோடு கடைப்பிடிக்க வேண்டிய ஒப்பந்த விதிகளை கடைப்பிடிக்கையில் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டனவா அல்லது எதிர்பாராமல் ஏற்பட்டனவா என்பது பற்றியும்:

iii. இலங்கையின் ஆயுதப் படைகளால் ஆயுத முரண்பாட்டின் விதிகள், சர்வதேச மனிதாபிமான விதிகள் ஆகியவற்றின் கீழான மேன்மை, இராணுவத் தேவை, விகிதாசாரத் தன்மை ஆகியன பின்பற்றப்பட்டமை அல்லது அலட்சியப்படுத்தப்பட்டமை என்பது பற்றியும்:

iv. அரசு சாராத நபர்களால் தமிழீழ விடுதலை புலிகள் தங்களது ஆயுத நடவடிக்கைகள் தொடர்பான நடத்தையில் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு உட்பட்டதா என்பது பற்றியும்:

v. தமிழீழ விடுதலை புலிகள், மனிதக் கேடயங்களாக மக்களைப் பயன்படுத்தியமை, அவ்வாறான நடத்தை சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை எந்தளவில் மீறப்பட்டிருக்கிறது என்பதுடன், அது சாதாரண பொதுமக்களின் உயிரிழப்புக்களுக்கு கணிசமான அளவு பங்களித்திருக்கிறதா அல்லது பங்களித்திருக்ககூடுமா என்பது பற்றியும்:

(ஆ) சர்வதேச மனிதாபிமானச் சட்டம் அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு மாறாக தமிழீழ விடுதலை புலிகளின் அல்லது தமிழீழ விடுதலை புலிகள் ஏதாவது அரசியல் கட்சிகளோடு இணைந்த சட்டரீதியற்ற இராணுவக குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சிறுவர் சிப்பாய்கள் ஆட்சேர்ப்பு.

(இ) தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகள், அவ்வாறான சட்டரீதியற்ற நடவடிக்கைகளின் மூலமாகப் பெறப்பட்ட நிதி மற்றும் ஏனைய வளங்கள் இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய மற்றும் கொரில்லா யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டமை.

(ஈ) தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் அல்லது அவர் சார்பில் செயற்பட்ட எவரேனும் ஆட்களின் நேரடி உத்தரவின் கீழ் சிறுவர் சிப்பாய்களையும் ஏனைய போராளிகளையும் பயன்படுத்தி தமிழீழ விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள், அத்தோடு அவ்வாறான நடவடிக்கைகள் ஆகியவை சர்வதேச மனிதாபிமானச் சட்டம் அல்லது மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் கொண்டுள்ள குற்றத்தன்மை.

மேலும், சொல்லப்பட்ட விசாரணை ஆணைக்குழு சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட நிபுணத்துவமும் மேலே குறிப்பிடப்பட்ட விடயங்கள் சார்பான சட்ட அறிவினையும் சம்பந்தப்பட்ட ஏனைய பரிமாணங்களினதும் அனுபவங்களையும் கொண்ட கண்ணியமிக்க சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்பது எனது கருத்தாகும். ஆணைக்குழுவின் பணிக்குப் பொருத்தமான விடயங்களில் அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் ஆலோசனை வழங்குவதற்காக கீழ்க்காண்பவர்களை விசாரணை ஆணைக்குழுவின் ஆலோசனை குழுவிற்கு நியமிப்பதோடு, குறித்த ஆலோசனைக்குழுவிற்கு அவ்வப்போது தேவைப்படும்போது நான் மேலும் நிபுணர்களை நியமிக்கலாம்.

1. The Ringht Honourable சேர் டெஸ்மன் டி சில்வா, ஜனாதிபதி சட்டத்தணி (தலைவர்)
2. சேர் ஜெப்றி நைஸ், ஜனாதிபதி சட்டத்தரணி
3. பேராசிரியர் டேவிட் கிரேன்

இலங்கைச் ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலச்சினையின் கீழ் இரண்டாயிரத்து பதின்நான்காம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் நாளன்று, கொழும்பில் அளிக்கப்பட்டது.

Related Posts