ஜனாதிபதி – சம்பந்தன் சந்திப்பு

இலங்கையின் தேசியப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்துவைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் இன்று காலை அவரை சந்தித்துப் பேசினார்.

பிரிபடாத- ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் சாத்தியப்படக்கூடியதுமான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய தீர்வுத்திட்டம் பற்றி ஆராய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக இதன்போது மகிந்த ராஜபக்ஷவிடம் சம்பந்தன் மீண்டும் வலியுறுத்தியதாக அக்கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, காணி விடயங்கள், மக்களை அவர்களின் ஆரம்ப இடங்களிலேயே மீளக்குடியேற்றுதல் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல் இராணுவத்தை முகாம்களுக்குள்ளேயே முடக்குதல் அரசியல் கைதிகளை விடுவித்தல் உள்ளி்ட்ட விடயங்கள் பற்றியும் பேசப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவது பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவும் உடனிருந்துள்ளனர்.இந்த சந்திப்பு சினேகபூர்வமாக அமைந்திருந்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது.

Related Posts