ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு இலங்கை விமானப் படையின் 3 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2025 ஜனவரி 31ஆம் திகதி ஜனாதிபதி யாழிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இலங்கை விமானப் படையின் 03 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற விடயங்கள் தொடர்பில் நேற்று (02) விளக்கமளித்துள்ள பாதுகாப்பு அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
மேற்படி விஜயத்திற்கு இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அவ்வாறான எந்தவொரு விமானங்களையும் பயன்படுத்தப்படவில்லை என இலங்கை விமானப்படை தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், ஜனாதிபதி தனது விஜயத்திற்காக அவரது உத்தியோகபூர்வ வாகனத்தையே பயன்படுத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானவை என பாதுகாப்பு அமைச்சு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.