ஜனாதிபதி‬ வருகையின் போது ‪வலி‬.வடக்கில் மேலதிக ‪‎காணிகள்‬ விடுவிப்பில் ஏந்த ஏற்பாடும் ‪‎இல்லை‬

யாழ்ப்பாணத்துக்கு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் நிலையில் அவரது வருகையின் போது வலி.வடக்கில் மேலதிக காணிகளை விடுவிப்பதற்கான உத்தியோகபூர்வமான எந்த நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை என யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் முன்னர் தமக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் நிலவிடுவிப்பு மற்றும் மீள்குடியேற்ற அறிவிப்பை யாழ்ப்பாணம் வருகையின் போது ஜனாதிபதி விடுவிப்பார் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே எஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி நில மீட்புக்கான தமது போராட்டங்களை கைவிட்டு 26 வருடங்களுக்கு மேலாக இன்னமும் யாழ்ப்பாணத்தில் 31 அகதி முகாம்களில் உள்ள சுமார் 3,405 வலி.வடக்கு மக்களின் எதிர்பார்ப்பும் இதனால் வீணானது.

யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி வலி.வடக்கு மக்களுக்கு வழங்கிய அந்த 6 மாதகாலக்கெடு இம்மாதத்துடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் நாளை யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி வலி.வடக்கில் இனங்காணப்பட்டு மீள்குடியேற்றத்திற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட 200 ஏக்கர் நிலத்தினை மக்களிடம் கையளிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதிகளை விட்டுவிலவகுவதற்கு தற்போது இராணுவத்திரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலி.வடக்கில் மேலதிக காணிகளை விடுவிப்பதற்கான எந்த ஒரு உத்தியோகபூர்வமான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று யாழ்.மாவட்ட செயலக தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts