காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள் விரும்புவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டி பலாலியில் உள்ள தங்கள் பாரம்பரிய நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்குமாறு கோருவதற்காகவே அவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஆவலாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தன்னை நாங்கள் சந்திப்பதற்கான எங்கள் துயரங்களை முன்வைப்பதற்காக வாய்ப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம் என அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
மயிலிட்டியை சேர்ந்த 700 மீனவகுடும்பங்களும் பலாலியை சேர்ந்த 2000ம் குடும்பங்களும் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1990 முதல் 6500 ஏக்கர் நிலத்தினை படையினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தின் போது 3500 ஏக்கர் நிலத்தினை விடுவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் மயிலிட்டி பலாலியில் 3000 ஏக்கர் நிலத்தினை தொடர்ந்தும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
3500 ஏக்கர் நிலம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றில் 500 ஏக்கரை படையினரே தற்போதும் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் காங்கேசன்துறை கீரிமலை வறுத்தவிளான் கட்டுவன் ஆகிய பகுதிகளில் இந்த நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மயிலிட்டி துறைமுகத்தை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தலாம்,பலாலி நிலத்தை விவசாயத்திற்காக பயன்படுத்தலாம் ஆனால் இதற்கு நிலங்கள் விடுவிக்கப்படுவது அவசியம் என தெரிவித்துள்ள அருணாசலம் குணபாலசிங்கம் நாங்கள் உயிர் பிழைப்பதற்காக இந்த நிலங்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை முழுமையாக பாதித்துள்ள பொருளாதார நெருக்கடி எங்களையும் பாதித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.