13ஆவது திருத்த சட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியுடன் நேரடியாக பேசவேண்டுமே தவிர, வெளியில் நின்று பேசிக்கொள்வதால் எவ்விதமான பயனுமில்லை என யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவுறித்தியுள்ளார்.
யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நல்லாட்சி பிரிவு நேற்றய தினம் யாழ். மாநகர சபையில் யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவிக்கையில்…
அன்றும் இன்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி போன்று செயற்பட்டு, எல்லா அரசியல் கட்சிகளுக்கும் எதிரான கருத்தினை கொண்டுள்ளார்கள். அதனை மாற்றி தெரிவுக்குழுவில் இணைந்து செயற்பட வேண்டும் என கூறிய அவர், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் யாழ். மாவட்டத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல நடைபெற்று வருகின்றன. அவற்றில் தமிழ் மக்களும் அங்கம் வகிக்கின்றார்கள். ஆகவே, ஜனநாயக ரீதியில் தென்னிலங்கை மக்களுடன் வடபகுதி மக்கள் ஒன்று சேரவில்லை என்று கூறுவதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தவிர்க்க வேண்டும் என்று கூறிய அவர், 13ஆவது திருத்த சட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதியுடன் நேரடியாக பேசவேண்டுமே தவிர, வெளியில் நின்று பேசிக்கொள்வதால் எவ்விதமான பயனுமில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையுடன் மக்கள் செயற்பட்டு வரும் இவ்வேளையில், அதனை குழப்பும் வகையில் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூறினார்.
மேலும், நாம் இலங்கையர் என்ற சிந்தனையுடன் செயற்பட்டால் நாட்டினை மேலும் அபிவிருத்தி செய்துகொள்வதுடன், ஆசியாவிலேயே அதிசயம் மிக்க ஒரு நாடாக மாற்ற முடியும் என்று தெரிவித்த அவர் அதனூடே யாழ். மாவட்டத்தினையும் அத்தகையதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று மாநகர முதல்வர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக எதுவித கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.