ஜனாதிபதியின் யாழ்ப்பாணப் பயணத்தின் போது பாதைகள் திறக்கப்படுமா ?

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடி பின் நகர்த்தப்படலாம் என யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா எதிர்வரும் 18ம் திகதி யாழ்பாணம் வருகை தந்து புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடி காங்கேசன்துறை வரையில் பின் நகர்த்தப்படலாம் எனவும் காங்கேசன்துறை வரையிலான பகுதி விடுவிக்கப்படலாம் என தாம் எதிர்பார்ப்பதாகவும் , அத்துடன் வளலாய் மக்களின் பாவனைக்கு வசாவிளான் பாடசாலைக்கு பின் புறமாக உள்ள பாதை விடுவிக்கப்படலாம் எனவும் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்லை – அராலி வீதி மற்றும் பருத்தித்துறை – கீரிமலை வீதி ஆகியன உயர் பாதுக்காப்பு வலயத்தின் ஊடக செல்வதனால் குறித்த இரு வீதிகளும் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படவில்லை இதனால் வளலாயில் உள்ள மக்கள் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு வருகை தருவதற்கு பல கிலோ மீற்றர் தூரம் சுற்றி வரவேண்டிய தேவை இருந்தது.

அதனால் வசாவிளான் பாடசாலைக்கு பின்புறமாக உள்ள பாதையை ஆவது திறந்து மக்களின் போக்குவரத்தினை இலகு படுத்தி தர கோரி கடந்த பல மாதங்களாக இராணுவ தரப்பினரிடம் சம்பந்தப்பட்ட தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

எனவே யாழ்ப்பணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை குறித்த பாதை திறக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

இதேவேளை கடந்த 26 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காங்கேசதுறை நடேஸ்வரா கல்லூரி கடந்த இரண்டாம் திகதி முதல் சொந்த இடத்தில இயங்க ஆரம்பித்து உள்ளது.

அந்நிலையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடி அகற்றப்படவில்லை. தினமும் பாடசாலை மாணவர்கள் குறிப்பிட்ட ஒரு சிற்றூர்தியிலையே பாடசாலை செல்லல வேண்டிய நிலை உள்ளது.

அதனால் அனைத்து மாணவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் சமூகமளிக்க வேண்டும். அதன் பின்னர் குறித்த சிற்றூர்தியில் பாடசாலை செல்ல வேண்டிய நிலை தற்போது காணப்படுகின்றது.

அதனால் மாணவர்கள் பல இடையூறுகளை சந்திக்க நேர்கின்றது. ஆகவே குறித்த இராணுவ சோதனை சாவடியினை பின் நகர்த்தி பாடசாலை மாணவர்களுக்கு இயல்வான போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Posts