இரணைமடுகுளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார் கிளிநொச்சி இரணைமடுகுளத்திற்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று(05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்ளளவு முழுமையை எட்டியுள்ள நிலையில் ஆளுநர் றெஜினோல்ட் குரே விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளார்.
இரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது. இதுவரை காலமும் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்ளளவு தற்போது ஒரு இலட்சத்து 19500 ஏக்கர் அடியாக(147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயரும் போது குளம் இந்த கொள்லளவை அடையும். தற்போது இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 35.4 அடியாக காணப்படுகிறது.
ஜனாதிபதியை அழைத்து வந்து இரணைமடுகுளத்தை திறக்கும் திட்டம் இருப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட போது கருத்து தெரிவித்த அளுநர் ஆம், ஆனாலும் தற்போது குளத்தின் நிலைமைகளை பார்வையிடுவதற்காவே வருகை தந்துள்ளேன். குளத்தின் நீர் மட்டம் அதன் வான் பாயும் அளவை இன்னமும் அடையவில்லை. எனவே இது தொடர்பில் மாவட்ட அரச அதிபருடன் இனைந்து நீர்ப்பாசனத்திணைக்களத்தின் அறிவித்தல்களை பெற்று அதற்கமைவாக ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.