ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்று ஜனாதிபதி செயலகத்திற்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2015 ஜனவரி 9ஆம் திகதி முதல் ஆறு வருட காலத்திற்கு ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு கடந்த வாரம் அபிப்ராயத்தை வெளிப்படுத்தியிருந்தது.
இது கடுமையான வாதப்பிரதி வாதங்களை தோற்று வித்திருந்த நிலையில், உச்சநீதிமன்றமானது தனது நிலைப்பாட்டினை உத்தியோகபூர்வமான வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தனது இணையத்தளத்தில் பதவிக்காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைக்க ஏற்கனவே இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏழு இடையீட்டு மனுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து நீதியரசர்கள் கொண்ட நீதிபதிகள் குழாமை பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப் நியமித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ப்ரியசாந்த் டெப், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அளுவிகார, சிசிர.டி.ஆப்ரூ மற்றும் நீதியரசர் கே.ரி.சித்ரசிறி ஆகியோர் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.