ஜனாதிபதியின் பணிப்புரையை மேற்கொள்ள முயன்ற வலி.வடக்கு சேந்தான்குளம் பகுதி மக்களும் வலி வடக்குப் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினரும் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கவலைக்குரியதும், கண்டிக்கப்பட வேண்டியதும் ஆகும்.இவ்வாறு வலி.தெற்குப் பிரதேச சபையின் தலைவர் பிரகாஷ் தனது அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.
இதில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:
கடந்த பல வருட கால இடைவெளியின் பின்னர் பொது மக்களின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மக்களின் வாக்குப் பலத்தின் மூலம் பெற்று நிர்வகிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க முற்பட்ட வேளையில் பொது மக்களும் தவிசாளரும் உறுப்பினரும் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் மனிதாபிமானமற்ற முறையில் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தகைய செயற்பாடுகளை மக்கள் முன்னெடுக்கக் கூடாது என்பதையே இந்தத் தாக்குதல் சம்பவம் வலியுறுத்தி நிற்கின்றது. இதனை நாம் திட்டமிட்டதொரு செயலாகவே நோக்க வேண்டும். வலி.தெற்குப் பிரதேச சபை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அரசின் பணிப்புரையின்படி டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்ட வேளையில் அரச சார்பான கட்சியொன்றின் ஆதரவுடன் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு முயற்சி எடுக்கப்பட்டமையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.
இது போன்றே டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை தேசிய மட்டத்தில் முன்னெடுக்குமாறு அரசு அறிவித்துள்ள நிலையில், கடற்படையினர் பொதுமக்களையும் பிரதேச சபை உறுப்பினர்களையும் தாக்கி குழப்பத்தை உண்டாக்கியதன் மூலம் இத்தகைய செயல்களை மேற்கொள்ளவிடாது இடையூறு செய்துள்ளார்கள்.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக இயங்க படைத்தரப்பினர் தடையாக இருக்கின்றார்கள் என்பதையும், அதேவேளை இத்தகையவர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதையுமே இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது. இதனையிட்டு அரசும் சரி ஏனைய மனிதாபிமான அமைப்புகளும் சரி சிந்திக்க வேண்டிய தேவையும் அவசியமும் எற்பட்டுள்ளது என்றுள்ளது.