ஜனாதிபதியின் உறுதிமொழியை நிராகரித்த தமிழ் அரசியல் கைதிகள்

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக அடுத்த மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக தீர்வு முன்வைக்கப்படும் என்ற ஜனாதிபதியின் உறுதிமொழியை கைதிகள் நிராகரித்துள்ளனர்.

இந்த உறுதிமொழியை ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமெனவும், அதுவரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னதாக தீர்வு முன்வைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்சவை நேற்ற பிற்பகல் அவருடைய அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு உரையாடிய இரா.சம்பந்தன், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் எடுத்துரைத்துள்ளதாக அறியமுடிகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரிடம் எதிர்வரும் நவம்பர் முதல் வாரம் வரை கால அவகாசம் கோரியதாகவும், 7ஆம் திகதி அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவிருப்பதாகவும் உறுதியளித்துள்ளதாகவும் கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கினறன.

Related Posts