Ad Widget

ஜனாதிபதித் தேர்தல்: விதிமீறல்கள் இருமடங்காக உயர்வு

தற்போதைய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், கடந்த தேர்தலைவிட இரண்டு மடங்காக தேர்தல் விதிமீறல் புகார்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

paffrel-election

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை தேர்தல் வன்முறைகள் காரணமாக காயமடைந்த 46 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார் அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் முதல்இதுவரை 535 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 154 வன்முறை சம்பவங்களும் அடங்கும் என்று தெரிவித்த அவர், 29 தனிநபர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஒரு குண்டுத் தாக்குதல் உட்பட ஒன்பது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிய ரோகன ஹெட்டியாராச்சி, தனிப்பட்ட சொத்துக்கள் மீது மேற்கொள்ளப் பட்ட 30 தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட காலப்பகுதிக்குள் 32 தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குருநாகலை, புத்தளம், கண்டி ,களுத்துறை, காலி, ஆகிய மாவடடங்கில் இருந்து அதிகபட்ச வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடும்போது இந்த முறை தேர்தல் சட்டங்களை மீறும் செயல்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டினார் ரோகன ஹெட்டியாராச்சி.

இந்த தேர்தலில் அரச உடைமைகளைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது மற்றும் அரச அதிகாரங்கள் தவறான முறையில் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் சம்பவங்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார் பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி.

Related Posts