ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் எடுக்கும் தீர்மானமே இறுதித் தீர்ப்பாக அமையும்!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் எடுக்கும் தீர்மானமே இறுதித் தீர்ப்பாக அமையும். தமிழ் மக்களுக்குப் பொருத்தமான வேளையில் கூட்டமைப்பின் முடிவை அறிவிப்போம். இவ்வாறு தெரிவித்தார் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா.

mavai mp

தமிழ்த் தேசியக் கூடட்மைப்பு, தமிழசுக் கட்சியின் பிரதேச சபைத் தவிசாளர்கள் உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் கூட்டமொன்று நேற்று அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முடிவில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயங்களை மிகக் கவனமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாண்டுவருகின்றது. தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் எதிர்காலம் தொடர்பிலேயே முடிவுகள் எடுக்கப்படும்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் பொருத்தமான வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் ஆதரவு தொடர்பில் இறுதுியான முடிவு வெளியிடப்படும் என்றும் மாவை எம்.பி. தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தமிழ்மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்புக்களுக்கு இன்றைய அரசு மதிப்புக்கொடுக்கவில்லை என்றும் அவர் கவலைவெளியிட்டார்.

சிங்களத் தலைவர்களும், மக்களும் மைத்திரியை கணிசமான ஆதரிக்கும் நிலையில் தமிழ், முஸ்லிம் மக்கள் எடுக்கும் தீர்மானம் தான் தீர்ப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.

சகல தமிழ் மக்களும் வாக்களிப்பில் கலந்துகொள்வற்கு ஆவன செய்யவேண்டுமென்ற ஒருமித்த கருததும் கூட்டத்தில் எட்டப்பட்டது.

மாவை எம்.பியின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், ரெலோ அமைப்பின் செயலாளர் ஹென்றி மகேந்திரன், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பா.அரியநேத்திரன் மாகாண சபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன், பி.கலையரசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கூட்டமைப்பின் இத்தகைய மக்கள்பிரதிநிதிகள், முக்கியஸ்தர்களுடானன கலந்துரையாடல் கூட்டம் நேற்று பிற்பகல் மட்டக்களப்பிலும் நடைபெற்றது.

இன்று இதுபோன்ற சந்திப்பு வன்னி மாவட்ட முக்கியஸ்தர்களுக்கென வவுனியாவில் நடைபெறவுள்ளதாகவும் இதில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட கூட்டமைப்பினர் கலந்துகொள்வர் எனவும் மாவை எம்.பி தெரிவித்தார்.

நேற்று முன்தினம் புதன்கிழமை திருமலை மாவட்டத்தில் இத்தகைய கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts