ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஷிராணி?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

shirani

கடந்த வியாழக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் கோட்டே நாகவிகாராதிபதி வண.மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் இந்த அழைப்பு விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

‘நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கவேண்டும்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உட்பட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்கான சகல தகுதிகளும் இருப்பதாகவும் எனவே, அவரைப் பொது வேட்பாளராக நிறுத்துவது பொருத்தமானது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது என அறியமுடிகிறது.

பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இருந்தனர். எனினும் ஷிராணி பண்டாரநாயக்கா எவ்வித அரசியல் பிரவேசமும் இன்றி பக்கச்சார்பற்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவது உசிதம் எனவும், அவரது பதவி நீக்கத்துக்குப் பிறகு இதுவரை அவர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேராமல் இருப்பது அவருக்குரிய சாதகமான நிலைமை எனவும் இந்தக் கூட்டத்தில் பலரும் கருத்துக்களை முன்வைத்தனர் எனவும் தெரியவருகிறது.

Related Posts