ஜனாதிபதிக்கு வடமாகாணத்திலிருந்து கூடுதலான வாக்குகள் கிடைக்கும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வட மாகாணத்திலிருந்து அதிகமான வாக்குகள் கிடைக்கும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நம்பிக்கை தெரிவித்தார்.

kumara-velkamava

போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

யாழ் தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைப்பதற்காக வடபகுதிக்குச் சென்ற ஜனாதிபதியை மக்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றிருந்தனர். இதனூடாக வடக்கில் ஜனாதிபதிக்கு உள்ள ஆதரவு வெளியாகியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்ட அமைச்சர்- யுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டமையால் வடக்கிலுள்ள புதிய சந்ததியினர் ரயிலைக் கூட காணாமல் இருந்தனர்.ஜனாதிபதியின் முயற்சியால் அவர்கள் தற்பொழுது ரயில் சேவையை மீண்டும் பயன்படுத்தக் கூடியதாகவுள்ளது. யாழ்தேவி சேவையை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வின்போது ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் மக்கள் கூடியிருந்து ஜனாதிபதிக்கு தமது ஆரவாரத்தைத் தெரிவித்திருந்தனர்.

இந்திய இர்கோன் கம்பனிக்கு நிர்மாணப் பணிகள் வழங்கப்பட்டதில் எந்த முறைகேடும் இடம்பெறவில்லை. கடந்த காலத்தில் வடக்கில் ஒன்பது கிலோ மீற்றர் ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு ரயில்வே திணைக்களத்துக்கு ஒன்றரை வருடங்கள் பிடித்தன. யாழ்ப்பாணம்வரை ரயில் பாதையை அமைக்க அவர்களுக்கு இருபது வருடங்கள் பிடித்திருக்கும்.

துரிதமாக இதனை முடிப்பதற்காகவே இந்தியாவின் இர்கோன் கம்பனியிடம் வழங்கியிருந்தோம்.வடக்கின் புகையிரத சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட உதுருமித்துரு நிதியத்தின் மூலம் திரட்டப்பட்ட 40 மில்லியன் ரூபா பணம் வடபகுதிக்கான புகையிரத நிலையங்களை அமைக்கும் பணிகளுக்குச் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிதியத்திலிருந்த பணத்தில் எந்தவிதமான மோசடியும் இடம்பெறவில்லை எனவும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம மேலும் தெரிவித்தார்.

Related Posts