ஜனாதிபதிக்கு முதலமைச்சர் சி.வி கடிதம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடந்துமுடிந்துள்ள இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்திருந்த நிலையில், வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

mahintha-vicky

13 காரணங்களை சுட்டிக்காட்டியே அவர், இந்த கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1. மேன்மை தங்கிய உங்களின் பணியாளர் குழாமின் தலைவர் காமினி எஸ்.செனரத் அவர்களால் 2014 செப்டெம்பர் 23ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் உள்ளடக்கத்தைக் கீழே தருகின்றேன்.

‘மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் தலைமை தாங்கப்படும் அட்டவணைப்படுத்தப்படும் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தொடரில் யாழ்ப்பாணம்/ மன்னார் / வவுனியா/முல்லைத்தீவு/ கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் சார்பான விசேட இணை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த அட்டவணைப்படுத்தப்பட்ட கூட்டத்தில் 2012ஆம் ஆண்டில் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களில் எடுத்த தீர்மானங்களின் நடைமுறைப்படுத்தல் சம்பந்தமான முன்னேற்றம் பற்றியும் 2014 – 2016 ஆண்டுகால மத்திம கால முதலீட்டு திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள எதிர் கால அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமான முன்னேற்றம் பற்றியும் மதிப்பீடு செய்து கலந்துரையாட வேண்டி இருக்கின்றது.

மேற்படி கூட்டத்தில் நீங்கள் பங்குபற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம்’

2. 2012ஆம் ஆண்டில் நடந்த கூட்ட விடயதானம் சம்பந்தமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பின் நடைபெறும் இக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றியோ அதன் அவசியம் பற்றியோ வடமாகாணசபையானது கலந்து ஆலோசிக்கப்படவுமில்லை அதுபற்றித் தெரியப்படுத்தப்படவுமில்லை. வடமாகாண முதலமைச்சர் மற்றும் மத்திய அரசாங்க அமைச்சர்கள் ஆகியோரின் இணைத் தலைமைத்துவத்தின் கீழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று வருவது மேன்மை தங்கிய நீங்கள் அறியாததல்ல.

2013ஆம் ஆண்டில் நடந்த மாகாணசபைத் தேர்தலின் பின் உருவாக்கப்பட்டதே வடமாகாணசபை. 2012ஆம் ஆண்டில் நடைபெற்ற கூட்டம் சம்பந்தமான தொடர்புகளை 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் கவனத்துக்கு எடுப்பது எமது வடமாகாணசபைக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு விசனத்தையுங் கொடுக்கின்றது.

வடமாகாணம் சம்பந்தமாக அரசாங்கத்துக்கு இருக்கும் தற்போதைய கொள்கைகளை வடமாகாண மக்கள் பெருவாரியாக ஏற்க மறுத்ததோடல்லாமல் முன் எப்பொழுதும் இல்லாதவாறு 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெற்றுத் தந்தமை உங்களுக்கு நினைவிருக்கலாம்.

அப்படியிருந்தும் மக்களின் நேரிடைப் பிரதிநிதிகளால் நடாத்தப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் கூட்ட விடயதானங்களைக் கவனத்திற்கெடுக்காது இக்கூட்டம் நடைபெறப் போவது மனவருத்தத்தைக் கொடுக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களின் தேவைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் வடமாகாணசபை அந்த நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பங்குதாரராக இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது நன்கு புலனாகின்றது.

மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புக்களுக்கு முரணாக அதிகார அலகு ஒன்று வடமாகாணசபையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதும் புலனாகின்றது.

3. இம் மாதம் 12ஆம் திகதி மேன்மை தங்கிய நீங்கள் கிளிநொச்சியில் வைத்து வடமாகாண காணிகள் சம்பந்தமான அனுமதிப் பத்திரங்களை சுமார் 20,000 பேருக்கு வழங்கவிருப்பதாக அறிகின்றோம்.

கிளிநொச்சி காணித்துண்டுகள் 3,886 பேருக்கும், முல்லைத்தீவில் 3,642 பேருக்கும், மன்னாரில் 7,202 பேருக்கும், வவுனியாவில் 4,228 பேருக்கும், யாழ்ப்பாணத்தில் 1,001 பேருக்கும் வழங்கப் போவதாக அறிகின்றோம்.

அத்துடன் பல தூர இடங்களிலிருந்தும் 400க்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளில மக்களைக் கிளிநொச்சிக்குக் கொண்டுவர ஆயத்தங்கள் செய்யப்படுவதாகவும் அறிகின்றோம்.

நீங்கள் வழங்கும் அனுமதிப் பத்திரங்களைக் கையேற்கவே இவர்கள் கொண்டுவரப்படுகின்றார்கள் எனில் உங்கள் அரசியல் இலாபத்துக்காக அவர்கள் பல மாதங்களாக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாது காத்திருக்கப் பட்டுள்ளார்கள் என்று அர்த்தம்.

4. வடமாகாண காணிகள் சார் அமைச்சர் என்ற வகையில் எந்த செய்முறையின் பயனாக அனுமதிப்பத்திரப் பெறுநர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள், சட்ட ரீதியான எந்த அடிப்படையில் வடமாகாண காணிகள் சம்பந்தமாக நீங்கள் இத்துணை தாராள சிந்தையுடன் நடந்து கொள்ள உத்தேசித்துள்ளீர்கள், எப்பேர்ப்பட்ட நெறிமுறைகளின் வாயிலாக பங்கீட்டில் பெறுநர்கள் பயன் பெற்றுள்ளார்கள், எப்பொழுது தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.

மேலும் வடமாகாண வதிவாளர்களை விட வெளி மாகாண மக்களும் பயன் பெற இருக்கின்றார்களா என்பது போன்ற பல விடயங்கள் சம்பந்தமாக நான் கலந்து கொள்ளப் படவில்லை என்பதைத் தெரியத் தருகின்றேன். ஆனால் ஒன்று மட்டும் அறிந்து கொண்டுள்ளேன்.

உரிய செயல் முறை, வெளிப்படைத் தன்மை, பதிலளிக்குங் கடப்பாடு ஆகிய நல்லாட்சிக்கான குணாதிசயங்களைப் பேணி நடக்காது தங்கள் அரசியல் இலாபம் கருதி உங்கள் அரசாங்கத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவரும் உங்கள் கட்சிக்குச் சார்பான பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவரும் சேர்ந்து 1,284 அனுமதிப் பத்திரங்களை 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் கையளித்துள்ளார்கள்.

5. காணி அனுமதிப் பத்திரங்கள் வழமையாக சட்ட முறைப்படி வழங்கப்பட வேண்டும். அது சம்பந்தமான செயல் முறை பூரணப்படுத்தப் பட்டபின் உடனேயே பயன் பெறுநர்கள் தமது அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வர்.

உங்களால் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படப்போகும் நபர்கள் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனுமதிப் பத்திரங்களை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தாமதித்தே வழங்குவது நீதிப்படி ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு செயல் அன்று.

இது எப்படி இருக்கின்றதென்றால் மனிதாபிமானமற்ற முறையில் இரண்டரை இலட்சம் எமது தமிழ்ப் பேசும் மக்களை அநியாயமாகச் சிறைப்படுத்தி வைத்திருந்து 2010ஆம் ஆண்டில் உங்கள் ஜனாதிபதி தேர்தல் வந்த நேரத்தில் அவர்களைத் திடீர் என்று விடுதலை செய்தது போன்று இருக்கின்றது என்பதை வருத்தத்துடன் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

நாம் பின்பற்ற விரும்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 2013ஆம் ஆண்டின் தேர்தல்த் திட்ட அறிவிப்பு ஆவணமானது காணிபற்றிய பின்வரும் பொருத்தமான வாசகங்களைக் கொண்டுள்ளது.

‘யுத்தம் முடிந்து 4 வருடங்களுக்குப் பிறகுங்கூட அரசாங்கம் இன்று சில பகுதிகளை உயர் பாதுகாப்பு பிரதேசமெனவும் மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசமெனவும் கூறி மக்களை அங்கு குடியேற விடாமல்த் தடுத்து வருகின்றது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் காணி உரிமையாளர்களிடமிருந்து நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு ஜனநாயக அரசுக்கும் உரிய நடைமுறைகளைக் கைக்கொள்ளாமல் நிலத்தைச் சுவீகரிப்பதற்கு உரிமை இல்லை.

தனியார் சொத்துடமையை அரசாங்கம் மதித்து அந்தச் சொத்துக்கள் உரியவர்களுக்குச் சென்றடைவதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இந்த நிலங்களில் இருந்து வெளியேறியவர்களில் பலர் மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்தினுடைய நில சுவீகரிப்பு மீள்குடியிருப்பு தொடர்பான பயங்கரமான விதிமுறைகள் ஆயிரக் கணக்கான தமிழ் மக்களைத் தமது செழிப்பான விவசாய நிலங்களிலும் மீன்பிடிப் பிரதேசங்களிலிருந்தும் ஜீவனோபாயங்களை இழந்து வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

வலுக்கட்டாயமாக நிலத்தினை வடக்கு கிழக்குப் பகுதியிலிருந்து சுவீகரித்து அதனை அரச தேவைக்காகப் பயன்படுத்துவது பற்றி எமது அதி விசேட கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

வடக்குக் கிழக்கிலுள்ள மொழி, கலாச்சாரம், தனித்துவங்களைக் கருத்திற் கொண்டு இப்பகுதியிலுள்ள நில உரிமை, அதிகாரம், பாவனை தொடர்பான கொள்கைகளில் சீர் திருத்தங்கள் ஏற்பட்டாலன்றி சமாதானத்தினை ஏற்படுத்துவதென்பது முடியாததொன்றாகும்’

6. எதிர்கால அபிவிருத்தி தொடர்பான 2014 -16 ஆண்டுக்கான மத்தியகால முதலீட்டு திட்டம் குழப்பநிலை ஏற்படுத்துகின்றது. இது தமிழத் தேசியக் கூட்டமைப்பு சென்ற தேர்தலின் பொழுது மக்களிடம் பெற்ற ஆணையை உதாசீனம் செய்வதாக அமைந்துள்ளது.

அதாவது யுத்தத்திற்குப் பின்னரான மக்களின் தேவைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான தேவைகள் இங்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இது தொடர்பாக 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதியிடப்பட்ட உங்கள் கடிதத்தைக் குறிப்பிட்டு 2014 ஏப்ரல் 21ந் திகதி நடந்த முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழ் அமைந்துள்ள வடமாகாணசபையின் சார்பாக, ஜனநாயக ரீதியில் எமக்குத் தேர்தலில் கிடைத்த வெற்றியையும் அதன் நிமித்தம் மஹிந்த சிந்தனையை வடமாகாணத்தில் பிரயோகிப்பது தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருந்தேன்.

மஹிந்த சிந்தனையானது இன்று வடமாகாண மக்களின் மிகப்பெரும் பகுதியினரால் நிராகரிக்கப்பட்ட சிந்தனையாகும் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.

7. இந் நிலையில் இப்பொழுது அழைக்கப்பட்ட கூட்டமானது ஒரு சட்டபூர்வமான முன்னேற்றத்துக்காகவென வெளிப்படைத்தன்மை உடையதாகவோ அல்லது ஒற்றுமை அடிப்படையிலானதாகவோ இல்லை என்று தெளிவாகத் தெரிகின்றது.

தேர்தலில் ஏமாற்றில் ஈடுபடுபவர்களுக்காக வேண்டி வடமாகாண மக்கள் தங்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்குத் தங்களின் வாக்குகளை அளிக்கவில்லை.

ஏற்கெனவே கூறியது போன்று இந்த காணி உரிமையாளர்கள் சட்ட பூர்வ அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலுங் கூட இங்கு ஏற்பட்டுள்ள காலதாமதத்தை மறைக்கும் விதமாக இதற்கென ஒழுங்கு செய்யப்பட்ட இவ் விழாவில் பங்குபற்றுவதன் மூலம் வடமாகாணசபை இத்தவறினை மறைக்க விரும்பவில்லை.

8. மேற் கூறிய விடயங்கள் அந்தந்தப் பின்னணிகளில் வைத்து ஆராயப் பட வேண்டியனவாகும். 2014 ஜனவரி 2ஆம் திகதி, நீங்கள் வடமாகாணசபையின் ஆரோக்கியமான செயற்பாட்டுக்காக ஒரு சில விடயங்களைச் செய்வதாக ஏற்றுக் கொண்டீர்கள்.

அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஜனவரி 2ஆம் திகதி அன்று உரையாடப்பட்ட விடயங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு 2014 ஜனவரி 26ம் திகதியிடப்பட்ட எனது கடிதத்தின் மூலம் அனுப்பியிருந்தேன்.

(அதன் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது). இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இராணுவ அமைப்பைச் சேர்ந்த ஆளுநர் மாற்றி அமைக்கப்படுவார் எனக் கூறியதால் யூலை மாதம் வரையும் நாம் காத்திருந்தோம். ஏமாற்றப்பட்டோம்.

27.07.2014ஆம் திகதியன்று அதே ஆண்டு ஜனவரி 2ம் திகதி பேசப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதில் தங்களுக்குரிய கடமைகளையும் பொறுப்புக்களையுந் தெரிவித்திருந்தேன். குறிப்பாக 2014 ஓகஸ்ட் நடைபெறுவதற்காக வேண்டி அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த முதலமைச்சர்கள் கூட்டம் தொடர்பாக நான் மூன்று விடயங்களை வடமாகாண சபையின் திறமையான செயற்பாட்டுக்காக வேண்டி உங்களிடம் கேட்டிருந்தேன்.

அதாவது
1. வடமாகாண ஆளுநரையும் பிரதம செயலாளரையும் மாற்றுதல்.
2. ஜனாதிபதி செயலணியின் செயற்திட்டங்களை வடமாகாணசபைக்கு மாற்றுவது.
3. வடமாகாணத்தின் பல்வேறுபட்ட தேவைகளைக் கணிப்பீடு செய்வது.
இம்மூன்றையுஞ் செய்வதின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டிருந்தேன். இத்துடன் நான் தொடர்பாடிய விடயங்களை உங்கள் பார்வைக்காக இணைத்து அனுப்புகின்றேன். இன்றுவiரை இவை தொடர்பான எதுவித பதிலும் உங்களிடமிருந்து கிடைக்கவில்லை என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன். இந்தியப் பிரதமர் மோடி அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மேன்மைதங்கிய உங்களுடன் என்னையும் வருமாறு அழைக்கப்பட்ட கடிதத்திற்கு நான் பதில் அனுப்பிய போது எனக்குள்ள அக்கறையை வலியுறுத்தியும் அவ்வாறு செய்வதனூடாக நான் எனது ஒத்துழைப்பை உங்களது செயற்பாடுகளுக்கு வழங்குகின்றேன் என்ற ஒரு மாயையைத் தவிர்ப்பதற்காக வேண்டி அந்த அழைப்பினை நான் நிராகரித்தேன்.

9. மிகவும் அவதானமாக எமது மந்திரிகள் குழாமுடனும் மாகாணசபை தலைவருடனும் மேற்படி உங்கள் கூட்டம் தொடர்பாகக் கலந்துறவாடி வடமாகாணசபையும் வடமாகாண மக்களும் ஓரம் கட்டப்பட்டுள்ள இந்நிலையில் மேற்படி ஒக்டோபர் 13ஆம் திகதிய கூட்டத்திலோ அரசியல் தொடர்பாக வடமாகாணத்தில் நடைபெறவுள்ள ஏனைய கூட்டங்களிலோ கலந்து கொள்வது அர்த்தமற்றதொன்றாகின்றது என்று தீர்மானித்துள்ளோம்.

10. வடமாகாணசபையை நீங்கள் புறக்கணித்தமையானது 13வது திருத்தத்திலுள்ள நடைமுறைச் சிக்கல்களையும் வெறுமையினையுங் காட்டி நிற்கின்றது. அரசாங்க விளம்பரங்களின் படி வடமாகாணசபை 2014ஆம் ஆண்டிலிருந்து 6 பில்லியன் ரூபாவைப் பெற்றிருந்ததாகவும் அதில் ஒரு சிறு பகுதியை மட்டுமே மேற்படி சபை பயன்படுத்தியதாகவும்; கூறப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் வட மாகாணசபைக்கு 1,875 மில்லியன்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு மேலதிகமாக 3,955 மில்லியன்கள் நேரடியாக மத்திய அரசினால் பயன்படுத்தப்பட்டதொன்றாகும்.

வடமாகாணசபை பொறுப்புடனும் விழிப்புடனும் செயற்பட்டு தமக்கென ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்திவருகிறது. இராணுவ ஆளுநர் ஒருவர் தொடர்ந்து இங்கு இருப்பதும், சட்டவிரோதமாக வெளிப்படையாகவே எதிர்ப்பைத் தெரிவித்து ஒத்துழைப்பு நல்காத பிரதம செயலாளர் பதவியில் தொடர்ந்திருப்பதும், தொடர்ந்தும் வடமாகாணம் இராணுவமயப்படுதலும், மாகாணசபை ஒதுக்கப்படுதலும், அரச அதிபர் போன்ற மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள் போன்றவர்களின் செயற்பாடுகள் மாகாணசபையின் செயற்பாடுகளுள் உள்நுழைவதும் வடமாகாண பிரதேச எல்லைகளுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கும் காணிகள் கபளீகரமும் கணிக்கப்பட முடியாத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இவையாவும் 2009 மே மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் முன்பாகவும் 2010 ஜனவரியில் இந்தியப் பிரதம மந்திரி முன்பாகவும் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேலதிகமாகச் செயற்பட இருப்பதாக தாங்கள் அளித்த வாக்குறுதியையும் மீறிய செயலாவன. மிக அண்மையில் 2014 செப்டெம்பர் மாதத்தில் ஐ.நா. பொதுச்சபையில் தாங்கள் இலங்கையில் வடமாகாணத்தில் ஜனநாயக அமைப்புக்கள் மீள அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளீர்கள்.

ஆனால் ஜனநாயகம் என்பது தேர்தல்களை நடாத்துவதற்கு மேலாகச் சென்று தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை எந்தத் தலையீடும் இல்லாமல் மக்கள் ஆணைப்படி அவர்கள் இறைமையை ஏற்று செயற்படுத்தலாகும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

11. நாம் ஒரு வருடம் பதவியில் இருந்து வந்துள்ள இன்றைய நிலையில் வடக்கில் மட்டுமன்றி கிழக்கிலும் கூட மாகாண சபை ஆட்சி முறைமை எமது ஒற்றையாட்சி முறைமையின் கீழ் ஒரு அதிகாரமற்ற ஓட்டை அமைப்பாகவே தென்படுகின்றது. தற்போதைய ஆட்சி முறையில் குறிப்பாக யுத்தத்திற்கு பின், நிலையான அரசியல் தீர்வு எதுவுமற்ற நிலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாகாண சபையானது அதிகாரமற்றதொன்றாகவே தென்படுகின்றது.

12. ஆகவே யுத்தத்தின் பின் தாங்கள் சர்வதேச கமூகத்திற்கும் இந்திய பிரதம மந்திரிக்கும் வாக்குறுதி அளித்தது போல் 13வது திருத்தத்தின் அப்பால் சென்று அதைக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண முதலமைச்சர் என்ற ரீதியிலே தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.

1987ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் 13வது திருத்தத்திற்கு வழிவகுத்தது. மேற்படி 13வது திருத்தச் சட்டத்தினைக் கட்டியெழுப்பும் போது தமிழ் மக்கள் கௌரவத்துடன் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வடக்கு கிழக்கில் வாழக் கூடிய ஒரு நிலைமையினை ஏற்படுத்த உத்தரவாதம் அளிப்பார்கள் என இந்திய அரசிடம் இருந்து எதிர் பார்க்கின்றனர். எம்மைப் பொறுத்தவரையில் ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் சட்ட வரையறைகளை உணர்ந்தவர்கள் நாங்கள்.

13. எங்கள் மேல் நம்பிக்கை வைத்து, கடந்த மாகாணசபை தேர்தலில் இராணுவத்துடன் சேர்ந்து நடாத்திய பல ஜனநாயக விரோத செயல்களையும் முறியடித்து எம்மை வடமாகாணசபைக்கு தெரிவு செய்த மக்களுக்காக வேண்டி நான் இக் கடிதத்தை பகிரங்கப்படுத்துகிறேன்.

2013 செப்டெம்பர் தேர்தலில் எம்மை தெரிந்தெடுத்த மக்களுக்காக அவர்களது தேவைகள் முன்னுரிமைகள் என்பவை பற்றி மத்திய அரசுடன் உரிய மரியாதையுடனும் ஒத்துழைப்புடனும் நாம் எவ்வாறு ஜனநாயக பாரம்பரியங்களை கடைப்பிடித்து செயற்பட்டோம் என்று இக் கடிதத்தினூடாக தெளிவாகின்றது. எமது மக்கள் நடப்பவற்றை அறிய சட்ட ரீதியான உரித்துடையவர்கள்.

14. மத்திய அரசாங்கத்தினுடைய அரச நிர்வாக, அரசியல் சிந்தனை பற்றாக் குறையாலும் அடம்பிடிக்கும் நிலையாலும் 2014 ஜனவரி 2ஆம் திகதி நடைபெற்ற எமது கூட்டத்தினதும் 2014 யூலை 26ம் திகதி நடைபெற்ற தொடர்பாடல் தொடர்பானதுமான அறிக்கையையும் இங்கே வெளியிடுவதினூடாக, நாங்கள் அரசாங்கத்துடன் ஜனநாயக ரீதியாக நல்லாட்சி அடிப்படையில் இணைந்து செயற்பட எவ்வளவு அக்கறையாக இருக்கின்றோம், இருந்திருக்கின்றோம் என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று நம்புகின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Posts