ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பு!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது அப்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் திஸ்ஸ அத்தநாயக்க இனவாதத்தை தூன்டியதாக குற்றம்சாட்டி சட்ட மா அதிபர் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கருத்து தெரிவித்த அரசு சட்டத்தரணி, இந்த வழக்கை முன்கொண்டு செல்ல பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் சாட்சியங்களை பதிவு செய்வது அவசியமென்று தெரிவித்தார்.

அத்துடன் பணிகள் காரணமாக தாம் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாதென்றும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேறொரு தினத்தை பெற்றுத் தருமாறும் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இதனையடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 17-ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts