யாழ்ப்பாணம் பலாலியில் இராணுவத்தின் வசமுள்ள ஒரு தொகைக் காணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார்.
‘சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவோம்’ என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது:-
“கடந்த காலங்களில் தேசத் துரோகிகள் என்ற நாமம் எங்களுக்குச் சூட்டப்பட்டது. இன்று இலங்கையில் சர்வாதிகாரத்தை ஒழித்து ஜனநாயகத்தை நிலைநாட்டி பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே மனித உரிமைகள் நிகழ்வைக் கொண்டாடும் அளவுக்கு ஜனநாயகம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவுடன் நாங்கள் உட்பட்ட மனித உரிமை அமைப்புகள், சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்ததன் விளைவே இந்த மாற்றம். மாற்றத்திற்கான ஆரம்பம் இடப்பட்டுள்ளது. இதனை நாங்கள் முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும்.
பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான சர்வதேச கொள்கைப் பிரகடனத்தில் கையெழுத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது முக்கியம். உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க முடியும். மனித உரிமைகள் தொடர்பில் எதிர்காலத்தில் விசேட பாடத்திட்டம் கல்வித்துறையில் முன்னெடுக்க பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்ட அபிவிருத்திகள் மீள முன்னெடுக்கப்படும். அதன் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் யாழ்.பலாலியில் இராணுவத்தின் வசமுள்ள ஒரு தொகைக் காணிகளை விடுவிக்க அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, நல்லாட்சிக்கான பயணத்தில் இந்த நாட்டில் மனித உரிமைகளும் உறுதிப்படுத்தப்படும்” – என்றார்.