சோனியாவை கிண்டல் செய்ததால் வாலிபர் குத்திக்கொலை

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் காங்கிரஸ் கவுன்சிலர் ஜதின்ராஜ் ‘விஜய் நகர் நண்பர்கள்’ என்ற பெயரில் ‘வாட்ஸ்-அப்’பில் ஒரு குரூப் உருவாக்கி இருந்தார். இதில் உள்ளவர்களுக்கு பிரசாந்த் நாயக் என்பவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாத்திரம் தேய்ப்பது போல கிண்டல் செய்து ‘வாட்ஸ்-அப்’பில் படம் அனுப்பினார்.

இதனால் இரு தரப்பினரும் நேற்று முன்தினம் இரவு அம்சா சவுக் என்ற இடத்தில் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்த விஜய் நகர் போலீசார், இரு தரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர்.

அப்போது அங்கு மீண்டும் மோதல் ஏற்பட்டதில் உமேஷ் வர்மா (வயது 33) கத்தியால் குத்தப்பட்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இச்சம்பவத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.

காவல் நிலையத்தில் காவல்துறையினர் கண்முன்னே இந்த சம்பவம் நடந்ததாக ஜதின்ராஜ் தரப்பினர் குற்றம் சாட்டினர். ஆனால் இதை மறுத்த போலீசார், இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts