சீனியின் அளவின் அடிப்படையில் சோடா உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு விதிக்கப்படும் வரி மீளவும் அதிகரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்ன அறிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நியமனம் நேற்று இடம்பெற்றது. அதில் ராஜித சேனரட்ன, மீளவும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் தனது கடமைகளை சுகாதார அமைச்சில் இன்று பொறுப்பெடுத்தார்.
கடமைகளைப் பொறுப்பேற்றவுடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்ன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சீனியின் அளவின் அடிப்படையில் சோடா உள்ளிட்ட குளிர்பானங்களுக்கு விதிக்கப்பட்ட வரி 30 சதவீதத்தால் குறைப்பதற்கு முன்னாள் நிதி அமைச்சர் மகிந்த ராஜபக்ச, அதிகாரிகளுக்குப் பணித்திருந்தார்.
இதன்மூலம் சோடா உள்ளிட்ட மென்பானங்களின் விலைகள் 30 சதவீதத்தால் குறைக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
நாட்டில் நீரழிவு நோயாளரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகச் சுட்டிக்காட்டி குளிர்பானங்களில் உள்ளடக்கப்படும் சீனியின் அளவுக்கு ஏற்ப வரி அதிகரிப்பு முன்னைய கூட்டு அரசில் சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்னவால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதனையே பின்னர் மகிந்த ராஜபக்ச குறைப்பதற்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் அதன் வரியை மீளவும் அதிகரிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார்.