முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் நான் அதிக அக்கறை கொண்டுள்ளேன். எனினும் நாம் வழங்கிய கால எல்லைக்குள் மக்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்ற முடியாமை கவலையளிப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தனது செயளாலர் ஊடாகவே இந்தச் செய்தியை கேப்பாப்புலவு மக்களுக்கு கூறியுள்ளார்.
நேற்று மாலை 6 மணியளவில் கேப்பாப்புலவு மக்களை சந்தித்த முதலமைச்சரின் செயளாலர் கேப்பாப்புலவு மக்களின் மாதிரி கிராமம் புனரமைக்கப்பட்டு பின்னர் நிரந்தர கிராமமாக மாற்றப்பட்டுள்ளது தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
மேலும் பொதுமக்களின் விருப்பத்துடனா இங்கு மக்கள் குடியமர்த்தப்பட்டனர்? என்ற கேள்வியினையும் மக்களிடையே எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்விக்கு பொதுமக்கள் அனைவரும் ஒரேகுரலில் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தாம் பலவந்தமாக இங்கு குடியேற்றப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பை தொரிவிக்க முடியாத வகையில் இராணுவ அழுத்தங்கள் இருந்ததாகவும் மக்கள் செயளாலரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் முதலமைச்சரின் செயளாலர் மாதிரிக்கிராம மக்களின் வாழ்விடங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நேரடியாக இரவில் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேப்பாப்புலவு மக்கள் கடந்த 19ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து போராடத் தயாராகியிருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மேலும் ஒருமாத கால அவகாசம் வழங்கும்படி கேப்பாப்புலவு மக்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு மதிப்பளித்து தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.