வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
அவருக்கான தண்டனை விவரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. கடந்த 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.
குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இந்நிலையில், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, பரப்பன அக்ரஹாரம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். இதனால் பரப்பன அக்ரஹார நீதிமன்ற வளாகம் மற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
மேலும் தமிழக-கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரப்பன அக்ரஹார பகுதியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். ஆனால் 11 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவில்லை. பின்னர் பிற்பகல் 2.15 மணியளவில் செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் பவானிசிங், இந்தவழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்ததாக தெரிவித்தார். ஜெயலலிதா உள்ளிட்டோருக்கான தண்டனைக்காலம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தத் தீர்ப்பால் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும் எம்எல்ஏ பதவியையும் உடனடியாக இழக்கிறார். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
அடுத்த முதல்வர் ஷீலா? ஓ.பி.எஸ்? செந்தில் பாலாஜி?
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால் அவரது முதல்வர் பதவி இரண்டாவது முறையாக பறிபோய்விட்டது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக மீண்டும் ஓ. பன்னீர்செல்வமே நியமிக்கப்படுவாரா அல்லது வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. 2001ஆம் ஆண்டு டான்சி ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அப்போது ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது
இதனைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். அவர் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இடைக்கால முதல்வராக இருந்தார். தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் 2வது முறையாக அவரது முதல்வர் பதவி பறிபோய்விட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒ.பன்னீர்செல்வமே முதல்வராவாரா? அல்லது வேறு யாராவது தேர்ந்தெடுக்கப்படுவார்களா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி. நத்தம் விஸ்வநாதன், ராஜ்யசபா எம்.பிக்கள் ரபி பெர்னாட், நவநீதகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவர் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.