சைவ மகா சபையின் ஆன்மீக எழுச்சி பாத யாத்திரை -நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்தனர்

சைவ மகா சபையின் ஏற்பாட்டில் ஈழத்துச் சிதம்பரம் நோக்கிய பாத யாத்திரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

PAATA YATTIRAI

இந்த யாத்திரையில் மழையையும் பொருட்படுத்தாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இணைந்துகொண்டனர்.

சைவ சமயத்தின் ஆன்மீக எழுச்சியாக இந்த பாத யாத்திரை அமைந்திருந்தது.

காலை 7.30 மணியளவில் சம்பில்துறை சம்புநாதஈஸ்வரத்தில் இருந்து ஆரம்பான இந்த யாத்திரை பிற்பகல் 5 மணியளவில் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடைந்தது.

பாத யாத்திரை சென்ற வீதிகளில் உள்ள ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

பொதுமக்கள் வீதிகளில் வாழை, தோரணங்கள் கட்டியிருந்ததுடன் தத்தமது வீடுகளுக்கு முன்பாக கும்பங்கள் வைத்து பாத யாத்திரையாகச் சென்ற பத்தர்களுக்கு வரவேற்பளித்தனர்.

சம்புநாதஈஸ்வரத்தில் சிவதொண்டர் அமைப்பால் நிர்மாணிக்கப்பட்ட 21 அடி உயரமான தியான சிலையின் உருவப்படம் இந்த யாத்திரையின் போது எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த தியான சிவனுக்கு வீதிகள் தோறும் நின்ற பக்தர்கள் தங்கள் பெயரால் பூசைகள் செய்தனர். சைவ சமயத்தின் பெருமையை நிலைநாட்டுவதுடன் இளம் சந்ததியினருக்கு சமயப் பற்றை ஊட்டும் முகமாகவும் இடம்பெற்ற இந்தப் பாத யாத்திரையில் பங்குபற்றிய இளைஞர், யுவதிகள் அனைவரும் “சிவாயநம” என்ற பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தவாறு சென்றமையை அவதானிக்க முடிந்தது.

இந்த பாத யாத்திரையில் சைவ மகா சபையின் இணை அமைப்புகளான சிவதொண்டர் அமைப்பு, சிவமங்கையர் அமைப்பு, சிவத்தமிழ் மானிட விடியற் கழகம், சிவன் மானிட மேம்பாட்டு நிறுவனம், சைவ நெறிக்கூடம், சிவானந்த மகரிசி நிலையம் ஆகியனவும் இணைந்துகொண்டன.

சம்புநாதஈஸ்வரத்தின் நரசிங்கசித்தர் சுவாமிகள், சின்மயா மிசன் வதிவிட ஆச்சாரியார் சிவேந்திர சைதன்யா, சைவ மகா சபைத் தலைவர் கலியுகவரதன், ஆகியோரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர்.

Related Posts