யாழ்ப்பாண, நல்லூர்க் கந்தசுவாமி ஆலய உற்சவத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸார், மரக்கறி உணவுகளை மட்டும் உண்டு ஆலயத்தின் புனிதத்தினைப் பேணி வருவதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன தெரிவித்தார்.
நல்லூர் ஆலய உற்சவ காலத்தில், அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகின்றமை என்ற வழமைக்காக அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்ட பொலிஸாரும் அசைவ உணவுகள் உண்ணாமல் சைவ உணவுகளை மாத்திரம் உண்டு வருகின்றனர்.
இலங்கையிலுள்ள எந்தப் பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸாருக்கு சைவ உணவுகள் வழங்கப்படுவதில்லை. அத்துடன், பொலிஸார் அசைவ உணவுகள் உண்ணாமல் இருப்பதில்லை. அவ்வாறு இருந்தும், நல்லூர் ஆலயத்திற்கு கடமை செய்வதற்காக பொலிஸார் சைவ உணவுகளை மாத்திரம் உண்டு வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
நல்லூர் ஆலய உற்சவத்திற்கு யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாரும், கிளிநொச்சி, மாங்குளம், முல்லைத்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸாருமாக 600இற்கும் மேற்பட்டவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.