சைவச் சிறுவர் இல்லத்தில் சிறுவர் சித்திரவதை இடம்பெறவில்லை : இல்லத் தலைவர்

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில், சிறுவர்கள் எவரும் தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படவில்லை என கிளிநொச்சி மகாதேவ சைவச் சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்துள்ளார்.

மகாதேவ சைவச் சிறுவர் இல்லத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதாக சிறுவன் ஒருவனின் தந்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் மாணவர்களை அதிகாரிகள் எவரும் தாக்கவில்லை என மறுத்திருக்கும் குறித்த சைவச் சிறுவர் இல்லத் தலைவர் சம்பவம் தொடர்பில் விளக்கக் கடிதம் ஒன்றையும் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

அவரது விளக்கக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….

சைவச் சிறுவர் இல்லத்தில் சிறுவர் சித்திரவதை – ஐவர் மருத்துவமனையில் என்ற செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தோம் 430க்கு மேற்பட்ட குழந்தைகளைப் பராமரித்து வரும் இல்லத்தில் இரண்டு மாணவர்கள் மோசமான நடத்தைப் பிறழ்வாகச் செயற்பட்டு எமது பெண் குழந்தைகள் மூவரைப் பலவந்தப்படுத்தி காதல் கடிதம் எழுதச் சொல்லி வற்புறுத்தியதுடன் எமது பெண்பிள்ளைகளுக்கு பாடசாலையில் வைத்து அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக கிளி/இந்துக் கல்லூரி அதிபர் அவர்கள் இவர்களை அழைத்து வந்து எம்முன் விசாரித்து எச்சரிக்கை செய்யப்பட்டது. பின்பும் இவர்கள் தொடர்ந்ததால் பெண் பிள்ளைகள் பாடசாலை போக மறுத்தனர். யாம் இதுபற்றி சிறுவர் நன்னடத்தைக்கு இந்த இரண்டு மாணவர்களையும் வைத்திருக்க முடியாது எனவும் உடன் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்புமாறும் கோரினோம். சிறுவர் நன்னடத்தை அதிகாரியும் கூட 28.09.2017ல் வந்து பேசி எச்சரித்துச் சென்றார். பின்பு இவர்களை நிறுத்திவிட்டு பெண் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பினோம். 04.10.2017ல் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்திற்கு குழப்படிகாரர்களை குடும்பத்துடன் இணைக்க அனுப்பினோம். அவர்கள் மீண்டும் எமது இல்லத்திற்கே திருப்பி அனுப்பினார்கள். இவர்கள் 3 நாள் வேலைக்களம் அது தமக்குப் பொருத்தமில்லை என பாடசாலை செல்லவில்லை. கிளி/இந்துக் கல்லூரி அதிபருக்கு இது தொடர்பில் அறிவித்தோம். இவர்கள் பாடசாலை போக மறுத்ததும் இவர்களை குடும்பத்துடன் இணைக்குமாறு கடிதம் எழுதினோம். இவர்கள் இப்படி நடந்து கொண்டிருக்கும் போது எமது இல்லத்தில் வளர்ந்து வரும் இளம் தென்னையில் இளநீர் களவாகப் பிடுங்கி 5 பேருக்கு மேல் குடித்தபோது சக மாணவர் ஒருவர் கண்டு பேசிய போது அவரை இவர்கள் மோசமாகத் தாக்கியதால் அவர் இவர்களை தாக்கியதாக தற்போது தான் 05.10.2017ல் தான் எமக்குக் கூறினர். சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் முன் இன்று நடந்த விசாரணையில் அடிவாங்கிய மாணவர்கள் தங்களை எந்த அதிகாரியோ விடுதி அதிபரோ தாக்கவில்லை எனவும் மாணவனே தாக்கியதாகவே நேரில் கூறியுள்ளனர். மாணவர்களுக்கு இடையில் அடிபாடு நடந்தமை பற்றி எவருமே நிருவாகத்திற்கு அறிவிக்கவில்லை. இது மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற ஒரு சம்பவம் எமது விடுதிப் பொறுப்பாளரோ வேறு அதிகாரிகளோ இந்த முறைப்பாடு செய்த மாணவர்களால் சுட்டிக்காட்டப்படவில்லை. பல்கலைக்கழக மாணவனுக்கும் மற்றும் பெண் பிள்ளைகளுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட மாணவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பிரச்சினையேயாகும். எமது ஊழியர்கள் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை. எமது இல்லத்தில் உள்ள எந்தவொரு குழந்தைக்கும் அடிக்கக் கூடாது என சகல ஊழியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts