சைட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் குதிக்கவுள்ள போக்குவரத்து சபை

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக எதிர்வரும் ஐந்தாம் திகதி போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

‘பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளினால், வைத்தியர்களை உருவாக்கமுடியாது’ என அமைச்சரொருவர் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை போக்குவரத்து சபையின் பொதுச்செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “சைட்டம் தனியார் கல்லூரியினால் இலவசக் கல்வியின் உரிமைகள் இல்லாமல் போவதுடன், மக்களின் சுதந்திரமும் பறிபோகும். இலவசக் கல்வியின் காரணமாகவே சாதாரண மக்களுடைய பிள்ளைகள் கூட இன்று வைத்திய சேவையினை பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சைட்டம் காரணமாக, இதற்கு முற்பட்ட காலத்தைப் போன்று பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே உயர் பதவிகளை வகிக்க முடியும் என்ற நிலை ஏற்படும்” என்றார்.

மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஆசிரியர்- அதிபர் ஒன்றிணைந்த சங்கம், போக்குவரத்து சங்கம் ஆகியன ஒன்றிணைந்து எதிர்வரும் 5ஆம் திகதி மேற்படி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் வேலைநிறுத்த போராட்டம், சனிக்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.e-jaffna.com/archives/81965

Related Posts