சேவாக் பற்றி சில சுவாரசியங்கள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் அறிவித்துள்ள நிலையில் அவர் பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள் இதோ:

sehwag

ஆவேசமாக ஆடினாலும், இயல்பில் சேவாக் மிகுந்த நகைச்சுவை உணர்வுமிக்கவர். பாகிஸ்தானின் முல்தான் நகரில் அந்த நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது, பாக். பவுலர் ஷோயிப் அக்தர், சேவாக்கிற்கு பந்து வீசிவிட்டு அந்த பந்தில் ரன் கிடைக்காத போதெல்லாம், “இப்போ ஹுக் ஷாட் அடி பார்ப்போம்” என்று சொல்லி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார்.

இரண்டு, மூன்று முறை பொறுமையாக தலையை ஆட்டியபடியே சேவாக் அதை கேட்டுக்கொண்டிருந்தார். ஒருமுறை அக்தர், ஸ்லெட்ஜிங் செய்துவிட்டு திரும்பியபோது, தனது பக்கத்தில் நின்ற ஃபீல்டர்களை பார்த்து சேவாக் இப்படி கேட்டார் “அக்தர் பந்து போடுறானா.. இல்லைன்னா என்கிட்ட பிச்சை கேக்குறானா”. என்று கேட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

முதல் பந்துகளில் பவுண்டரி

2002ம் ஆண்டு இங்கிலாந்தின் லாட்சில் நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 325 ரன்களை குவித்தது.

இதையும் விரட்டி பிடித்து, இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்தது. அப்போட்டியில், சேவாக்-கங்குலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். சேவாக் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். அடுத்தடுத்த ஓவர்களிலும் முதல் பந்துகள் பவுண்டரிக்கு விரட்டப்பட்டன. எதிர்முனையில் நின்ற கங்குலிக்கு பயம் வந்து விட்டது. பெரிய ஸ்கோரை விரட்டும் நாம் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. பொறுமை..பொறுமை என சேவாக்கிடம் கங்குலி கூறினாராம். ஆனால், அவர் சொல்லி வாய் மூடிய அடுத்த பந்தையும் சேவாக் பவுண்டரிக்கு விரட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு சேவாக்கிடம், அமைதியாக ஆடுங்கள் என்று எந்த கேப்டனும் சொன்னது கிடையாதாம்.

குறைந்த பந்தில் முச்சதம்

2008ல் சென்னையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில், 278 பந்துகளில் 300 ரன்களை கடந்தார். இதன்மூலம், குறைந்த பந்துகளில், முச்சதம் விளாசிய சாதனை இன்னும் சேவாக் பாக்கெட்டில்தான் உள்ளது.

டெஸ்ட் களத்தில் இருமுறை முச்சதம் கடந்தவரும் (2004ல் பாக்கிற்கு எதிராகவும், 2008ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும்) ஒரு டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் என்ற சாதனை பெற்ற ஒரே வீரர் சேவாக்தான். 2008ல் ஆஸி.க்கு எதிரான டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார் சேவாக்.

ஆஸ்திரேலிய பிரபல ஸ்பின்னர் ஷேன் வார்னே, தனது சிறந்த 100 டெஸ்ட் வீரர்களில், சேவாக்கிற்கு 35வது இடத்தை கொடுத்துள்ளார். சேவாக்கின் நகைச்சுவை உணர்வை வார்னே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த சம்பவம் சுவாரசியமானது.

வார்னே கூறுகையில், “இங்கிலாந்தின் லேஸ்டர்ஷையர் கவுண்டி அணிக்காக சேவாக்கும், அந்த நாட்டை சேர்ந்த ஜெர்மே ஸ்னேப் ஆகியோரும் இணைந்து ஆடினர். மிடில்செக்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, பவுலிங் செய்த பாகிஸ்தானின் அப்துல் ரசாக், ரிவர்ஸ் ஸ்விங் வகையில் பந்து வீச தொடங்கினார். பந்து கொஞ்சம் பழசானதும் இதுபோன்ற பந்தை வீச முடியும்., பாக். வேகப்பந்து வீச்சாளர்கள் அதுபோன்ற டேஞ்சர் பந்து வீச்சில் வல்லவர்கள்.

எதிர்முனையில் நின்ற ஸ்னேப்பிடம், சேவாக் இப்படி கூறினாராம்.. “இந்த பந்தை நாம் தொலைத்து கட்டியாக வேண்டும். அதற்கு என்னிடம் ஒரு திட்டம் உள்ளது” என்றாராம்.

அடுத்த ஓவரின்போது, சேவாக் வேண்டுமென்றே, பலம் முழுவதையும் கூட்டி அடித்து அந்த பந்தை மைதானத்தை தாண்டி போகச் செய்துவிட்டாராம். இதன்பிறகு புதிய பந்து கொண்டுவரப்பட்டது. எனவே ரசாக்கால் ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியாமல் போனது. இவ்வாறு வார்னே கூறியுள்ளார்.

Related Posts