கமல் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘பாபநாசம்’. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்தான் ‘பாபநாசம்’. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், நிவேதா தாமஸ், எஸ்தர், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மலையாள படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் கமல், கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் நான்கு பேரும் ஒரு மொபெட்டில் பயணிப்பது போன்ற ஒரு போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் ஹெல்மெட் அணியாமல் தான் நடித்ததற்காக கமல் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
வரும் ஜூலை முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் தமிழ் நாட்டில் அமலுக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், தன்னுடைய படத்தில் இந்த மாதிரியான காட்சியில் ஹெல்மெட் அணியாமல் நடித்ததற்காக வருந்துகிறேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, இந்த பைக் காட்சியை நாங்கள் ரொம்ப நாளைக்கு முன்பே எடுத்துவிட்டோம். இருந்தாலும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த காட்சியில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து நடித்திருக்க வேண்டும்.
நீங்கள் எப்படி வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல்வதை கட்டாயம் என்று நினைக்கிறீர்களோ, அதேபோல் ஹெல்மெட்டும் அவசியம் என்பதை உணருங்கள் என்றார்.