தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் அவதூறான செய்திகளை வெளியிடுவதனால், அந்த ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கூடியபோது, வடமாகாண சபையின் உறுப்பினர் ஐயதிலக வடமாகாணத்தில் உள்ள சில ஊடகங்கள் தன்னிசையாக, அவதூறான செய்திகளை வெளியிட்டு வருவதனால், அதனைத் தடுக்கும் வகையில், வடமாகாண சபை நடவடிக்கை எடுக்குமாறு சபையில் வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு இணங்க, சபையில், முன்வைக்கப்பட்ட பிரேரணையினை ஆமோதித்த வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், தொடர்ந்து சபையில் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள இணையத்தளங்கள், சில கட்சிகளினாலும், இராணுவ புலனாய்வாளர்களினாலும் நடாத்தப்படுகின்றன.
பணம் வழங்கப்பட்டு இந்த இணையத்தளங்களில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன.
எனவே, தகவல் திணைக்களம் மற்றும் ஊடக அமைச்சுக்கு, இந்த விடயங்களை தெரியப்படுத்தி, தகவல் திணைக்களத்தின் அனுமதியின்றி நடாத்தப்படும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், சபையில் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேணைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், குறித்த தீர்மானத்தினை நிறைவேற்றினார்.