செயற்கைக் கள்ளுக்குத் தடை! வடக்கு மாகாணசபையில் தீர்மானம்

தென்னிலங்கையிலிருந்து வடக்கு மாகாணத்துக்குள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் செயற்கைக் கள்ளுக்கு தடைவிதிக்கும் தீர்மானம் நேற்று நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் அமர்வில் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மாகாணசபைக்குட்பட்ட பனை, தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் கள்ளுக்கும் உடனடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை மன்றில் முன்மொழிந்து கருத்துத் தெரிவிக்கையில், மாகாண பனை, தென்னைவள அபிவிருத்திச் சங்கங்கள் அதன் அங்கத்தவர்களால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பனஞ்சாறு சார் பொருட்களை விற்பனை செய்வதற்கு உருவாக்கப்பட்டவை. இருப்பினும் சில பனை, தென்னைவள அபிவிருத்திச் சங்கங்கள் மிகவும் செயற்கையாக நொதிக்கவைக்கப்படும் கள்ளை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன.

இந்நிலையில், மாகாண பனை, தென்னை வள அபிவிருத்திச் சங்கங்கள் இவ்வாறு செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கள்ளை விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தவேண்டும்.

இப்பிரேரணைக்கு ஒரு உறுப்பினரைத் தவிர அனைவரும் ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், தென்னிலங்கையிலிருந்து வரும் செயற்கைக் கள் விற்பனையில் மாபியாக் கும்பலை ஒத்த கும்பலொன்று செயற்படுவதாகத் தெரிவித்தார். மேலும், அண்மையில் வடமராட்சி கிழக்கு பகுதியில் கூட்டுறவுச் சங்கத்திற்கு வெளியே ஒரு தொகுதி செயற்கைக் கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அது தொடர்பாக விசாரணை நடாத்தியபோது, மதுவரித் திணைக்களத்தினைச் சேர்ந்த அதிகாரியொருவரே செயற்கைக் கள்ளை விற்பனை செய்யுமாறு அச்சுறுத்தல் விடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. அதே அதிகாரிக்குத்தான் மது பாவனையைக் குறைத்தார் என சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன விருது வழங்கி கௌரவித்தார் எனவும் தெரிவித்தார்.

Related Posts