முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் பொலிஸார் அனுமதிக்கவில்லை.
நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்ததால், அதனை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், கேரதீவில் வைத்து இராணுவத்தால் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த நிலையிலேயே செம்மணியில் இன்று காலை 8.30 மணியளவில் நினைவேந்தலை நடத்த முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் முயற்சித்தார்.
எனினும் அங்கு வந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர், நிகழ்வை நடத்த தடை விதித்தனர்.