வடமாகாணத் தேர்தலை செப்ரெம்பர் ஏழாம் திகதி நடத்த அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுக்கான தேர்தலையும் அன்றைய தினமே நடத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.
தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் வடக்கில் மாகாண சபையை உத்தியோகபூர்வமாக நிறுவுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும் என்று அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றிரவு தெரிவித்தார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் கீழ் வடக்கு மாகாண சபையை நிறுவுவதற்கான ஆணையை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு விரைவில் வழங்குவார். அதைத் தொடர்ந்து பணிகள் விரைவுபடுத்தப்படும்.
மூன்று மாகாணங்களிலும் முதலமைச்சர் வேட்பாளர்களாக யாரை அறிவிப்பது என்பது பற்றி இப்போது அரச உயர்மட்டத்திலும், சுதந்திரக் கட்சி வட்டாரங்களிலும் ஆராயப்பட்டு வருகின்றன.
முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் சர்ச்சை ஏற்பட்டால் முதன்மை வேட்பாளர்கள் இன்றியே தேர்தலை சந்திப்பது பற்றியும் அரசு ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் தரப்பிலுள்ள பங்காளிக் கட்சிகள் பல, மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த மாகாணங்களில் தனித்து போட்டியிடும் என்று கூறப்படுகிறது.