கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் படங்கள் தயாரித்து சாதனைப் படைத்தது தமிழ் சினிமா. மொத்தம் 215 படங்கள். தமிழ் சினிமா வரலாற்றிலேயே இத்தனைப் படங்கள் எந்த ஆண்டும் வெளியானதில்லை. வாரத்துக்கு சராசரியாக நான்கு படங்களுக்கும் மேல் என்ற நிலைமை.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகியுள்ள படங்களைப் பார்த்தால் தலை கிறுகிறுத்துப் போய்விடும். ஜனவரி மாதத்தின் கடைசி வெள்ளியான 30-ம் தேதி வெளியாகும் எட்டுப் படங்களையும் சேர்த்தால் மொத்தம் 17 படங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு படம் வெளியான மாதிரிதான். வரும் வெள்ளியன்று எஸ் ஏ சந்திரசேகரனின் டூரிங் டாக்கீஸ், தரணி, இசை, கில்லாடி, புலன் விசாரணை 2, பொங்கி எழு மனோகரா உள்ளிட்ட 8 படங்கள் வருகின்றன.
இந்த வேகத்தில் போனால் இந்த ஆண்டு தமிழ் சினிமா 250 படங்களை வெளியிட்டாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள். காரணம், ஏற்கெனவே சென்சாராகி வெளியாகாமல் உள்ள படங்கள் மட்டும் 600.
இவற்றில் 100 படங்கள் வெளியானால் கூட பெரிய சாதனை படைத்துவிடும் தமிழ் சினிமா. ஆனால் இவை அனைத்தும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுமா என்பதுதான் பெரிய கேள்விக்குறி!