சென்னை வெள்ளத்தில் பலியானவர்கள் எத்தனை பேர்?

கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சென்னை நகரின் பல பகுதிகளில் மழை பெய்யாத நிலையில், நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பப் போராடிவருகிறது.

டிசம்பர் 2ஆம் தேதியன்று சென்னையைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தின் காரணமாக, தற்போதும் அடையாறு, கூவம் ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளும் தாம்பரம், முடிச்சூர், வடசென்னையின் பல பகுதிகளும் இன்னமும் பாதிப்பிலிருந்து மீளாமலேயே காட்சியளிக்கின்றன.

பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து ஐந்து நாட்களுக்கு மேலான நிலையிலும் மின் விநியோகம் சீரடையவில்லை. அந்தப் பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரின் காரணமாகவே, தற்போது அங்கு மின் இணைப்புக் கொடுக்க முடியாத நிலை இருப்பதாக மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரின் பல பகுதிகளில் அரசு அதிகாரிகளோ, உள்ளாட்சி நிர்வாகிகளோ வரவில்லை என்ற கோபம் தென்படுகிறது.

மிகவும் பாதிக்கப்பட்ட சூளைப் பள்ளம் போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள், குப்பைகள் அகற்றப்படாத காரணத்தால், சரும நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததால், நாசமான பொருட்கள் அனைத்தும் சாலைகளில் கொட்டப்பட்டுவருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சாலைகள் அனைத்தும் மிகப்பெரிய திறந்தவெளிக் குப்பை மேடாக தற்போதும் காட்சியளிக்கின்றன.

இதற்கிடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தன்னார்வத் தொண்டர்களும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்ச்சியாக நிவாரணப் பொருட்களை வழங்கிவருகின்றனர்.

ஆனால், உதவிகளை அளிக்கச் செல்லும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சில பிரச்சனைகளையும் சந்தித்துவருகின்றன. பல இடங்களில் முதல்வரின் படத்துடன் உதவிகளை அளிக்கச் சொல்லி வற்புறுத்தல்கள் இருப்பதாகவும் வேறு சில இடங்களில் உள்ளூர் அரசியல்வாதிகள் தாங்கள்தான் அந்த உதவியை அளிப்போம் எனக் கூறுவதாகவும் இம்மாதிரியான உதவிப் பணியில் ஈடுபட்டிருக்கும் கேர் அண்ட் வெல் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ராம் பிபிசியிடம் கூறினார்.

இருந்தபோதும் இந்த வெள்ளத்தில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு இதுவரை முழுமையான தகவல் எதையும் வெளியிடவில்லை. தமிழக முதலமைச்சர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கும் நிதி உதவி குறித்த அறிவிப்புகளின் மூலமே இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுவருகிறது.

சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் விரைவில் தெரிவிப்பதாகவும் கூறினர்.

இதுபோன்ற முந்தைய நிகழ்வுகளில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக அரசு விரிவான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் ஜி.சி. சேகர்.

இதற்கிடையில், தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts