சென்னையை அச்சுறுத்தும் புயல்

மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி, பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. மேலும் நாடா புயலும் ஏமாற்றியது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாளில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு வார்தா என்று பெயரிடப்படும். இந்த புயலால் அந்தமான் நிகோபார் தீவுகளில் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இதனால் பலத்த மழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புயல் வரும் 11ஆம் தேதி, சென்னைக்கும், ஆந்திராவிற்கும் இடையே கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 130கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். இதனால் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் சென்னையில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இந்த புயல் காரணமாக விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, காக்கிநாடா உள்ளிட்ட துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் தென் தமிழக கடலோர பகுதியில் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts