சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்து புதையுண்டது

28-building-that-collapsed-in-2 பேர் பலி- 5 பேர் கவலைக்கிடம்; 30 பேர் கதி என்ன?சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்டோரில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இடிபாடுகளில் சிக்கியுள்ள 30 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த கட்டிடம் அப்படியே இடிந்து தரைமட்டமானது.

இந்த இடிபாடுகளில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இருவர் பலி கட்டிடம் முழுவதும் மண்ணோடு மண்ணாக புதைந்துள்ளதால் அங்கு மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக 15 பேர் மீட்கப்பட்டு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மதுரையை அடுத்த டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த மருதுபாண்டி (வயது 25) என்று தெரியவந்துள்ளது. இதன் பின்னர் கட்டிட இடிபாடுகளில் இருந்து உயிரிழந்த நிலையில் மற்றொரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது 30 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க ராட்சத விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

மீட்புப் பணிகளில் மோப்ப நாயும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இடி தாக்கியே விபத்து நிகழ்ந்ததாக கட்டிடத்தை கட்டிவரும் கட்டுமான நிறுவனம் கூறுகிறது.

Related Posts