சென்னையில் சிங்களப் படம், திரையரங்குகளை முற்றுகையிட முடிவு!

சென்னையில் உள்ள இரண்டு திரையங்குகளில் சிங்கள படம் திரையிட முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுவதால், தமிழ் அமைப்புகள் அந்த அரங்குகளை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளன.

ஈழத்தில் தமிழருக்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, லட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்தனர் சிங்கள ராணுவத்தினர். இதை இலங்கை அதிபர் ராஜபக்சே நியாப்படுத்தி பேசி வருகிறார். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் இலங்கை அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

oba-nathuva-oba-ekka-with-u-without

இந்த நிலையில், ஒரு சிங்களப் படத்தை தமிழகத்தில் அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் திரையிட முயற்சித்துள்ளனர். பி.வி.ஆர் நிறுவனம், பிரசன்னா விதானகே என்ற சிங்களவர் இயக்கிய “ஒப நாதுவா, ஒப ஏக்க (With you, with out you)” என்ற சிங்கள படத்தை இந்தியா முழுவதும் ஆங்கில மொழிப் பெயர்ப்புடன் திரையிடுகின்றனர்.

இது 2012-ம் ஆண்டு வெளியான படம். ஈழப்போருக்கு பின் நடக்கும் காதல் கதை. நாயகியின் பெயர் செல்வி. ஒரு முன்னாள் சிங்கள ராணுவ வீரருக்கும் தமிழ்ப் பெண்ணான செல்விக்குமிடையேயான காதல் கதை.

சென்னையில் அமைந்தகரை ஸ்கைவாக் வணிக வளாகத்தில் உள்ள பி.வி.ஆர் திரையரங்கில் இரவு 7 மணிக் காட்சியும், ராயபேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யு வளாகத்தில் எஸ்கேப் திரையரங்கில் இரவு பத்து மணிக் காட்சியும் திரையிடப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அறிந்த தமிழ் அமைப்புகள் அரங்குகளை முற்றுகையிட முடிவு செய்துள்ளன. மும்பை, பெங்களூரு, டெல்லி, புனே போன்ற நகரங்களில் உள்ள பிவிஆர் மால்களில் இந்தப் படம் இன்று வெளியாகிறது.

Related Posts