சென்டிமெண்ட் நிறைந்த திரையுலகில் வெல்வாரா விஜய் ?

தெறி படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை பரதன் இயக்குகிறார். கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்கிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கவிருக்கிறதாம்.

இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்குநடிகர் ஜெகபதிபாபுவை ஒப்பந்தம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. கதைக்கு ஏற்ற வில்லனாக அவர் இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு படத்தைத் தெலுங்கில் வெளியிட அவர் இருப்பது ஒரு பலமாக இருக்கும் என்றும் நினைத்திருக்கலாம்.

இந்தச் செய்தி வந்தவுடன், ஜெகபதிபாபுவுக்கு எதிரான கருத்துகளும் வரத்தொடங்கிவிட்டன. 1989 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை தெலுங்கில் முன்னணிநடிகர்களில் ஒருவராக வலம்வந்துகொண்டிருக்கிறார். 2006 ஆம் ஆண்டு அர்ஜூன் நடித்த மதராஸி படத்தின் மூலம் அவர் நேரடித்தமிழ்ப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

அதன்பின்னர், விக்ரம் நடித்த தாண்டவம், ரஜினி நடித்த லிங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவ்விரு படங்களுமே வசூல் ரீதியாகப் பலவீனமான படங்களே. அதன்பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்த கான் படத்தில் ஒப்பந்தமானார். அந்தப்படம் பாதியோடு நின்றுபோனது. சென்டிமெண்ட் நிறைந்த திரையுலகில் இதைத்தான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஜெகபதிபாபு நடித்த நேரடித்தமிழ்ப்படங்களின் நிலை நன்றாக இல்லை. இப்போது விஜய் படத்தில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். என்னவாகுமோ? என்கிற பேச்சு வந்துவிட்டது. ஆனால் இத்தனை சென்டிமெண்டுகள் நிறைந்த திரையுலகில்தான், பிச்சைக்காரன் என்று எவரும் வைக்கத்தயங்கிய தலைப்பை வைத்து, அதை வெற்றிப்படமாக்கவும் ஆக்கினார் விஜய் ஆண்டனி.

Related Posts