தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் செந்தூரனின் பூதவுடல் ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் சிந்த அக்கியுடன் சங்கமமானது.
மாணவன் செந்தூரனின் இறுதிக் கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டிருந்ததுடன், பெருந்திரளான மக்கள் அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டனி செயலாளர் வீ.ஆனந்த சங்கரி உட்பட பெருந்திரளான மாணவர்கள் பொதுமக்கள் இன்று தமது அஞ்சலியைச் செலுத்தினர்.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களினால் சுமந்து செல்லப்பட்ட அவரது பூதவுடல் கோப்பாய் இந்து மயானத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.
இதன்போது அவரது ஆத்தமா சாந்தியடைய வேண்டும் என சகலரும் பிரார்த்தனைச் செய்தனர்.