முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை வான்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்பாக முற்றவெளியில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ள அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்பட பலர் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றனர்.
2006ஆம் ஆண்டு காலை 6 மணியளவில் இலங்கை வான்படையின் இரண்டு கிபிர் போர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியது.
இதன்போது 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர்.
அன்று இந்த சம்பவம் தமிழர் தாயகம், புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
போரினால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண் பிள்ளைகளின் பராமரிப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 23ஆம் திகதி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.