செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்

சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது.

வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது கடந்த அமர்வில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் செங்கோலைத் தூக்கியெறிந்து சபையின் சிறப்புரிமையை மீறியதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிக்கட்சி தலைவரால் சபையில் கோரப்பட்டது.

இதனால் ஆளும் கட்சியினர் , எதிர்க்கட்சியினருக்கு இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விவாதமின்றி குறித்த விடயம் தீர்வுக்கு வந்தது.

வாக்களித்த மக்கள் சின்னமே செங்கோல் – சீ.வி.கே,

நடைமுறை விதிக் கோவையின் 68 ஆவது சரத்தில் உள்ளதாவது, உறுப்பினர்கள் சபை நடவடிக்கையின் எல்லா சந்தர்ப்பத்திலும் சபையின் கௌரவம் மற்றும் அவைத்தலைவரின் அதிகாரத்தை பாதுகாக்கும் வகையிலும் நடந்து கொள்ளவேண்டும்.

உறுப்பினர்கள் சபைக்கு வரும் போதும் வெளியேறும் போதும் மூலாசனத்திற்கு தலைசாய்த்துச் செல்ல வேண்டும்.

இந்த செங்கோல் 38 உறுப்பினர்களின் கௌரவத்திற்குரியது. அத்துடன் உறுப்பினர்களை தெரிவு செய்த மக்களின் இறையான்மையின் சின்னம்.

அதற்கமைய செங்கோல் இல்லாத நிலையில் சபையின் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது . எனினும் சென்ற முறை உறுப்பினரால் தூக்கியெறியப்பட்டது. இது சபையின் கௌரவத்தைப் பாதித்துள்ளது என்றார்.

சபைச் சிறப்புரிமையை சிவாஜி மீறிவிட்டார் – தவராசா

செங்கோல் வடக்கு மாகாண மக்களின் ஜனநாயக உரிமையின் பாதுகாப்புப் பெட்டகமாகும்.

வடக்கு மாகாண சபை தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டமோ ஜனநாயக போராட்டமாக இருக்கலாம் அதன் விளைவு தான் இந்த சபை. எனினும் கடந்த 25 வருடங்களாக எமக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.இன்று கிடைத்துள்ளது.

எனவே உறுப்பினர்கள் அதனைப் பாதுகாக்க வேண்டும். கடந்த அமர்வில் நடந்த நிகழ்வு தற்சமயம் நடந்த நிகழ்வு அல்ல. இவ்வாறு நடைபெறப் போகின்றது என ஊடகவியலாளர்கள் சிலர் அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

எனவே இது திட்டமிட்டு வடக்கு மாகாண சபையினை அவமதிக்கின்ற செயலாகும். இந்த சபையானது நாங்கள் வருங்காலத்திற்கு விட்டுச் செல்லும் பொக்கிசம்.

இவ்வாறு நடைபெற்ற சம்பவம் தொடர்பில் கண்டிக்கத்தக்கது. இதற்கு அவைத்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சபை நடவடிக்கையில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு உறுப்பினரையும் இடைநிறுத்த வேண்டும்.

இவ்வாறு செய்யத்தவறின் ஜனநாயகத்தை மதிக்க தவறியவர்களாக வரலாற்றில் பதியப்படுவீர்கள் என்றார்.

செங்கோல் எறியப்பட்டதற்கு நடவடிக்கை எடுத்தால் சபை இரண்டுபடும் – விந்தன் எச்சரிக்கை

அன்றைய நிகழ்வு வருத்தப்படக்கூடியதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும். எனினும் அவ்வாறு நடைபெற்றமைக்கு பின்னணிகள் உள்ளன. அவற்றை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

உறுப்பினரின் பிரேரணை கடந்த 6 மாதங்களாக சபையில் பேசப்பட்டு பல வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன. அதன்படி அன்று எடுக்கப்பட்டு பின்பும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தான் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றது.

இவ்வாறான நடவடிக்கைகள் நாடாளுமன்றம், ஏனைய மாகாண சபைகளிலும் நடைபெற்று வருகின்றது. இது பாரதூரமான விடயமல்ல. கோபத்தின் உச்சமே இவ்வாறு நடப்பதற்கு காரணம்.

எனவே இதனை ஒரு விவாதமாக எடுக்காது முடிவுக்கு கொண்டுவர வேண்டும். மாறாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டால் சபை இரண்டுபடும்.

எதிர்க்கட்சி தலைவரின் கருத்து எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. எதிர்வரும் காலங்களில் இவ்வாறு நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

உணர்வுள்ள வலியுள்ள தமிழனுக்கு ஆத்திரம் வரத்தான் செய்யும் – பிரதி அவைத்தலைவர்

கடந்த அமர்வில் இடம்பெற்ற விடயம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல . இருப்பினும் உலகத்திற்கே தெரியும் தமிழ் மக்கள் மீது இன அழிப்பு இடம்பெற்றது என்பது.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளும் தெரிவித்து வருகின்றனர் . ஐ.நாவில் தீர்மானம் கூட கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பிரேரணை முன்மொழியப்பட்டு வழிமொழிந்த பிரேரணை . எனினும் முதலமைச்சர் கூறியவற்றுக்கு எவரும் முன்மொழியவோ வழிமொழியவோ இல்லை.

இவ்வாறு இருக்கையில் தனது பிரேரணை இழுத்தடிக்கப்பட்டால் உணர்வுள்ள வலியுள்ள தமிழனுக்கு கோபம் வரவே செய்யும்.

கோபத்தில் நடைபெற்ற சம்பவம் .ஆகவே மன்னிக்கப்பட வேண்டும். அனைவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்கின்றேன். விவாதத்திற்கு எடுக்காது முடிவுக்கு கொண்டு வாருங்கள் .

இல்லையேல் இனப்படுகொலையை எடுக்க முடியாத வடக்கு மாகாண சபை, தோற்கடிக்கப்பட்டது. என்ற செய்திகள் வரும் அவற்றைத் தவிருங்கள்.

இனஅழிப்பை நாங்கள் நேரில் கண்டோம். விறைப்பு மருந்து இல்லாமையால் கோடரியால் காலைக்கொத்தியதையும் இறந்தவர்களின் சடலங்களுக்குள் தங்கள் உறவுகளை தேடியவர்களை கண்டோம். இவை எல்லாம் இன அழிப்பு தான் என்றார்.

செங்கோல் விவகாரம் கையாளப்படாமலே முடிவுக்கு வர கூடாது – சயந்தன்

இது தற்செயலான விடயம் என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.முன்னரும் ஒரு விடயத்தில் செங்கோலை தூக்கிச் செல்வதாக தெரிவித்திருந்தார்.

இதேபோல எதிர்க்கட்சி எறிந்திருந்தால் என்ன நடவடிக்கை ஏற்பட்டிருக்கும் என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.

மக்கள் எம்மிடம் தந்த சின்னம். இறந்த உயிர்களின் சின்னம் தான் செங்கோல். அந்த உயிர்களின் தியாகத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது.

எனவே குறித்த விடயம் கையாளப்படாமல் முடிவுக்கு வரக்கூடாது என்றார்.

செங்கோலா மூன்று இலட்சம் மக்களா – விந்தன் கேள்வி

மூன்று இலட்சம் மக்களை பறிகொடுத்த எனக்கு செங்கோலா அல்லது மக்களா எமக்கு முக்கியம். எங்கள் இரத்தமும் கொதிக்கின்றது.6 மாதங்கள் பிரேரணையினை இழுத்தடித்தால் கோபம் வரத்தானே செய்யும் .

இனப்படுகொலைக்கு பயமில்லை – சீ.வி.கே

இனப்படுகொலைக்கு பயந்தவர்கள் நாமில்லை .நிட்சயமாக குறித்த பிரேரணையினை ஆதார பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படும்.

இங்கு நான் ஒரு பகடைக்காய். ஆனால் 38பேரின் கௌரவத்தையும் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.

வாக்களிக்க அனுமதிக்காதமைக்கு மூன்று காரணம்

வாக்களிக்க விடும் பட்சத்து எதிர்க்கட்சி எதிர்த்து தான் வாக்களிப்பர். அத்துடன் முதலமைச்சர் கூறியதை மறுத்து வாக்களிக்க கூடாது என மறுத்தல் அல்லது வெளிநடப்பு செய்தால் குறித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டதாக அமையக் கூடாது.

ஆளும் கட்சிக்குள் பிழவு ஏற்படும். அதனால் தான் வாக்கெடுப்பிற்கு விட மாட்டேன் என்றேன். எனினும் இவ்வாறு செங்கோல் தூக்குவதற்கு இனிஒருமுறை செயற்பட அனுமதிக்க முடியாது.

தூக்கி எறியப்பட்ட செங்கோல் உடைந்தமையால் அதனை ஆக்கிய இடத்திற்கு கொண்டு சென்று 3 நாட்களுக்குள் திருத்திக் கொண்டு வந்தேன்.

இன்று செங்கோல் இல்லாது இருந்திருந்தால் கூட்டத்தை நடாத்தியிருக்க முடியாது.

செங்கோல் தூக்கி எறியப்பட்ட விடயம் மிகவும் ஒரு கவலை தரும் விடயம். எனவே சபையில் கவலை வெளியிட வேண்டும் என்றார்.

செங்கோல் எறியப்பட்டதால் அதில் உடைவு ஏற்பட்டிருந்தது. அதனை திருத்தி எடுப்பதற்கு 5000 ரூபா செலவாகி விட்டது. எனவே அதனை பொறுப்பெடுத்து செலவுத் தொகையை சிவாஜிலிங்கம் செலுத்த வேண்டும் .

அவ்வாறு இல்லையேல் நான் பொறுப்பெடுக்கின்றேன் என்றார்.

ஜனவரியிலும் எனது பிரேரணை எடுக்கப்படுவது சந்தேகமே – சிவாஜி

கடந்த 6 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட பிரேரணை கடந்த அமர்வில் சபைக்கு வந்தது. எனினும் இதனை ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எடுக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஜனவரியிலும் எனது பிரேரணை எடுத்துக் கொள்ளப்படுமோ என்பது சந்தேகம் தான் . ஏனெனில் ஆதிக்க சக்திகள் தான் பின்னணியில் உள்ளனர்.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது செங்கோலுக்கு எதிராக பல நாட்கள் நாடாளுமன்றத்தில் போராடினோம். இதனால் நாடாளுமன்றில் பின்கதவால் செங்கோல் கொண்டுவந்து வைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

போராட்டம் பற்றி எதுவும் தெரியாதவர்கள் போராட்டத்தின் தியாகம் பற்றி தற்போது பேசி வருகின்றனர் இதற்கு நாம் வெட்கப்படுகின்றேன்.

கடந்த அமர்வு ஒத்தி வைக்கப்பட்ட பின்னரே செங்கோலைத்தட்டி விட்டுள்ளேன். இதற்காக நான் எவ்விதமான தண்டனையினையும் ஏற்கத்தயாராக உள்ளேன்.

நீங்கள் வாக்கெடுப்பிற்கு விடலாம்.அத்துடன் எனக்கு தண்டனையும் வழங்கலாம் இது தான் எனது நிலைப்பாடு என்றார் .

செங்கோல் உடைந்ததற்கு தண்டப்பணத்தைக் கட்டவோ அல்லது மன்னிப்போ கோரப்போவதில்லை. சபையின் உறுப்பினர் பதவியைப்பறித்தாலும் சரி உயிரே பறிக்கப்பட்டாலும் நான் கவலைப்பட மாட்டேன் என்றார்.

சிவாஜிலிங்கத்தின் பிரேரணைக்கு நாம் எதிர்ப்பில்லை – சீ.எம்

நாங்கள் எவரும் குறித்த பிரேரணைக்கு எதிர்பானவர்கள் இல்லை. எனினும் தற்போது அதனை நிறைவேற்றினால் எங்களுக்கு பாதகமாகவும் சிலருக்கு சாதகமாகவும் அமையும்.

எனவே நாங்களும் நீங்களும் இணைந்து தகுந்த ஆதார பூர்வமாக ஜனவரி 08 ஆம் திகதிக்கு பின் கொண்டுவருவோம். மிகவும் ஆதார பூர்வமானதாகவும் எமக்கு சாதகமானதாகவும் அமையும்.

கட்டாயமாக ஜனாதிபதி தேர்தலுக்குப்பின் குறித்த பிரேரணை கொண்டுவரப்படும் இதில் மாற்றுக் கருத்துக்களில்லை என்றார்.

Related Posts