செங்கோலை தூக்க சிவாஜிலிங்கம் முயற்சி

வடமாகாண சபையின் அமர்வுகள் கடும் கூச்சல் குழப்பத்தின் மத்தியில் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் வரவு -செலவுத் திட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் செவ்வாய்க்கிழமை (20) முன்வைக்கப்பட்டு, அது தொடர்பிலான தற்போது விவாதம் இன்று புதன்கிழமை இடம்பெறுகின்றது.

வடமாகாண உறுப்பினர் கே.சயந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகளை விமர்சித்து உரையாற்றினார். இதற்கு ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிலர் பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.
“உங்களுடைய விமர்சனங்களை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள். தற்போது வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான விவாதம் இடம்பெற்று வருகிறது. அது தொடர்பாக மட்டும் உரையாற்றுங்கள்” என தெரிவித்தனர்.

எனினும் சயந்தன் தனது உரையை தொடர்ந்தமையால், சபையில் அமளி துமளி ஏற்பட்டது. இதன் உச்சக்கட்டமாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், செங்கோலை தூக்க முயற்சி செய்தார். இதனையடுத்து, வடமாகாண சபையின் அமர்வுகள் 1 மணித்தியாலம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ஆரம்பமாகியது

இதன்போது, சபையில் சிவாஜிலிங்கம் “என்னால் சபை அமர்வுக்கு இடையூறு ஏற்பட்டதாக நீங்கள் கருதுவீர்களேயானால் அதற்கு நான் மன்னிப்பு கோருகின்றேன்” என தெரிவித்தார்.

அதற்கு உறுப்பினர் சயந்தன், “சிவாஜிங்கத்தின் பெருந்தன்மையை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன். மன்னிப்பு கேட்ட அவரது பெருந்தன்மையை முன்னுதாரணமாக கொள்கின்றேன்” என தெரிவித்தார்.

இதன்போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் “சம்பவம் நடைபெற்ற போது நானே சிவாஜிலிங்கத்தை சபையின் முன்னால் வருமாறு அழைத்தேன். நான் அழைத்தமைக்கு அமைய அவர் முன்னால் வந்ததை அனைவரும் தவறாக எண்ணி கூச்சல், குழப்பம் விளைவித்து விட்டனர். எனவே சகலதையும் மறந்து விவாதத்தை தொடர்வோம்” என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, விவாதம் மீண்டும் ஆரம்பமாகியது.

Related Posts