சூளைமேடு கொலை வழக்கு: டக்ளஸுக்கு அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட சாட்சியாளர்கள் எட்டுப்பேரையும், ஜனவரி மாதம் 18ஆம் திகதியன்று சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை சூளைமேட்டில், 1986ஆம் ஆண்டு, தீபாவளி கொண்டாடத்தின் போது டக்ளஸ் உள்ளிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், சென்னை பிரஜையொருவரைச் சுட்டுக்கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

சந்தேகநபர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவ்வனைவரும் தப்பியோடிவிட்டனர் என்று பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

வழக்கை இரண்டாகப் பிரித்து, டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகத் தனியான வழக்கொன்றும், ஏனைய சந்தேநபர்களுக்கு எதிராக பிறிதொரு வழக்கொன்றும் நடத்தப்படுகின்றது. இந்த வழக்கில், டக்ளஸ் தேவானந்தா, இரண்டாவது சந்தேகநபராவார்.

இந்தநிலையில், இந்தியாவுக்கு வந்தால் தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததால், காணொளிக் காட்சி (வீடியோ கொன்பரசிங்) மூலம் ஆஜராக அனுமதிக்கக் கோரி டக்ளஸ் தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts