வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘மாஸ்’. ‘அஞ்சான்’ தோல்வியைத் தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படம் என்பதால், இப்படத்திற்காக மிகுந்த சிரத்தை எடுத்து நடித்து வருகிறார் சூர்யா.
வெங்கட் பிரபுவுக்கும் ‘பிரியாணி’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆகவே, இவருடைய உழைப்பும் இந்த படத்தில் அதிமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படம் வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மார்ச் 27-ந் தேதியே படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக வரும் பொங்கலுக்கு இப்படத்தின் டீசரை வெளியிடுவார்கள் எனவும் தெரிகிறது.
மாஸ் படத்தில் பிரேம்ஜி, கருணாஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சூர்யா, இரண்டு வேடங்களில் நடித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இப்படத்திற்கு பிறகு சூர்யா, விக்ரம் குமார் இயக்கும் ‘24’ என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.