கேமரா இல்லாமல், கதை இல்லாமல் படம் எடுத்தாலும் எடுப்பாரே தவிர, அவரது தம்பி பிரேம்ஜி மற்றும் ஒளிப்பதிவாளர் சக்திசரவணன் இல்லாமல் படம் எடுக்கவே மாட்டார் வெங்கட் பிரபு.
அந்தளவுக்கு சக்தி சரவணனுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் அப்படியொரு நட்பு. சின்னத்திரை இயக்குநர் சி.ஜே.பாஸ்கரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக பல சீரியல்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தவர் சக்தி சரவணன்.
அவரை தன்னுடைய சென்னை-600028 படத்தின் மூலம் பெரியதிரைக்குக் கொண்டு வந்தார் வெங்கட் பிரபு. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கட்பிரபுவின் எல்லாப்படங்களுக்கும் சக்திசரவணன்தான் ஒளிப்பதிவாளர்.
சக்திசரவணனின் திறமை ஒரு பக்கம் என்றால், அவருக்கும் வெங்கட்பிரபுவுக்கும் இடையில் உள்ள நட்பும் புரிதலும்தான் இருவரையும் இணைந்து பயணிக்க வைத்தது. அந்தளவுக்கு வெங்கட்பிரபுவுக்கு வலது கரமாகவே விளங்கியவர் சக்தி சரவணன்.
சூர்யாவை வைத்து வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்துக்கு ஒளிப்பதிவாளர் சக்திசரவணன் இல்லை, ஆர்.டி.ராஜசேகர். மாஸ் படத்தின் ஹீரோவான சூர்யா ஆர்.டி.ராஜசேகரை சிபாரிசு செய்திருக்கிறார். வேறு வழியில்லாமல் தன் நண்பரை கழற்றிவிட்டுவிட்டார் வெங்கட்பிரபு.