Ad Widget

சுவிஸ் குமாரின் தாயாரின் மரணச்சடங்கில் கலந்துகொள்வதற்கு சந்தேக நபர்களுக்கு அனுமதி!

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவியான வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் ஒருவரான மகாலிங்கம் தவநிதி என்பவரின் மரண சடங்கில் கலந்துகொள்ள மற்றைய சந்தேகநபர் மற்றும் வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்கள் இருவருக்கும் ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் சபேசன் அனுமதியளித்துள்ளார்.

suwiss-kumar

வித்தியாவின் வழக்கு விசாரணை ஊர்காவல்துறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றுவருகின்ற நிலையில் அவற்றுக்கு வருகை தரும் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுவிஸ்குமாரது தாயாரான மகாலிங்கம் தவநிதி மற்றும் அவரது உறவினர் சிவதேவன் செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த சந்தேகநபர்களில் முதலாவது சந்தேகநபரான மகாலிங்கம் தவநிதி எனப்படும் சுவிஸ்குமாரின் தாயார் நோய்காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவரின் மரண நிகழ்வுகள் நாளை 21ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்வுள்ள நிலையில் அதற்கு செல்வதற்கு இரண்டாவது சந்தேகநபர் மற்றும் வித்தியா கொலை சந்தேகநபர்களில் ஒன்பதாவது மற்றும் நான்காவது சந்தேகநபர்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என அவர்கள் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி ரகுபதி மன்றில் கோரிக்கை விண்ணப்பமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை கோரிக்கை தொடர்பாக பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சுகாஸ் விண்ணப்பமொன்றை செய்திருந்தார்.

இதன்படி அவ் விண்ணப்பத்தில், சந்தேகநபரின் தயாரின் மரண சடங்கிற்கு செல்வதற்கான அனுமதியளிப்பதானது மனிதாபிமான செயற்பாடாகும்.

இதற்கு செல்வதற்கு மன்று அனுமதியளிப்பதற்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் இவ்வாறு மரண வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து சந்தேகநபர்கள் தப்பிச்செல்வதற்கு அனுமதிக்க முடியாது.

ஏனேனில் சந்தேநபரான சுவிஸ்குமார் வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த போதும் அவர் தன் பணபலத்தை பயன்படுத்தி அங்கிருந்து கொழும்பு சென்றிருந்தார்.

அதன் பின்னர் அவர் கொழும்பில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச்செல்வதற்காக மறைந்திருந்த போது கொழும்பு வெள்ளவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச்சென்றிருந்தார் என்பது தொடர்பில் இதுவரை உண்மை தெரியாமலே உள்ளது. இது இவ்வாறு இருக்க இம் முறையும் இவர் மரண சடங்கிற்காக சென்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்செல்வதற்கு அனுமதிக்க முடியாது.

எனவே இவரை மரண சடங்கிற்கு அழைத்துசெல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளிப்பின் மிகக்கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என அவ் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த மூவருக்கும் மரணமான மகாலிங்கம் தவநிதி என்பவரது மரண சடங்கில் கலந்துகொள்ள ஊர்காவல்துறை பதில் நீதிவான் சபேசன் அனுமதியளித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts