யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் தப்பித்துச் செல்ல உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் தலைமறைவாக உள்ளதாக, ஊர்காவற்துறை நீதிமன்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீகஜனை கைதுசெய்ய முயற்சித்தபோது, அவர் தலைமறைவாக உள்ளமை தெரியவந்துள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் தெரிவித்த குற்றப்புலனாய்வு பிரிவினர், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு தடைவிதிக்க குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், ஸ்ரீகஜனை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாதென குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, யாழில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் கொழும்பிற்கு தப்பிச் செல்ல உடந்தையாக செயற்பட்ட வடக்கு மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க அண்மையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.