யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமாரை கொழும்பிற்கு தப்பிச்செல்ல யாழ். உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் உதவினார் என ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீகஜன் குறித்து பல முக்கிய விடயங்களை நீதிமன்றத்தில் சுவிஸ்குமார் தெரிவித்துள்ளார்.
யாழ்.மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாக இடம்பெற்ற எதிர்த்தரப்பு சாட்சியப்பதிவின் போதே சுவிஸ்குமார் இவ்விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
வித்தியா கொலையுண்டதன் பின்னர், கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி தன்னை சந்திக்க வேண்டுமென நண்பர்களிடம் ஸ்ரீகஜன் குறிப்பிட்டதாகவும், அதன் பின்னர் நண்பர்கள் சகிதம் தான் சென்றபோது தனது நண்பர்களை அங்கிருந்த பொலிஸார் கைதுசெய்ததாகவும் சுவிஸ்குமார் குறிப்பிட்டுள்ளார். எனினும், தனது நண்பர்களை எதற்காக கைதுசெய்கின்றார்கள் என ஸ்ரீகஜனிடம் கேட்டபோது, அதற்கும் தனக்கும் தொடர்பில்லையென ஸ்ரீகஜன் குறிப்பிட்டதாகவும் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார்.
தனது நண்பர்கள் கைதுசெய்யப்பட்டதன் பின்னர், மறுநாள் (18ஆம் திகதி) ஸ்ரீகஜன் தனது வீட்டிற்கு வந்து, தன்னை சந்திக்க வேண்டுமென மனைவியிடம் கூறியதாகவும், அதன் பின்னர் தான் வீட்டிற்கு வெளியில் சென்று ஸ்ரீகஜனை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீகஜனை தான் சந்தித்தபோது, “ஊர்மக்கள் உங்களை அடித்துக்கொல்லப் போகின்றார்கள். நான் சொல்வதை கேட்டு செயற்பட்டால் 10 நிமிடங்களில் உங்களை காப்பாற்றுகிறேன்” என ஸ்ரீகஜன் குறிப்பிட்டதாகவும், அதன் பின்னர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாய் சகிதம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு ஸ்ரீகஜனுடன் சென்றதாகவும் சுவிஸ்குமார் சாட்சியமளித்துள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் நீண்ட நேர காத்திருப்பிற்கு பின்னர், தனது மாமியின் (மனைவியின் தாய்) கண்ணருகே ஏற்கனவே ஏற்பட்டிருந்த காயம் தொடர்பாக முறைப்பாடொன்றை பதிவுசெய்து விட்டு செல்லுமாறும், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்வதற்கான கடிதம் ஒன்றை தந்ததாகவும் சுவிஸ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அதற்குள் தமது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதால், அச்சம் காரணமாக கொழும்பிற்கு தப்பிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
வித்திய கொலை தொடர்பாக நடத்தப்பட்ட கடந்த இரண்டு வருட கால விசாரணையில் வெளிவராத பல தகவல்களை, எதிரிகள் தற்போது வெளியிட்டு வருகின்றனர். முக்கியமாக, நேற்றைய சாட்சியப்பதிவின் போது எதிரிகள் குறிப்பிட்ட விடயங்களுக்கு அமைவாக, சட்ட வைத்திய அதிகாரியிடம் மீண்டும் சாட்சியப்பதிவை மேற்கொள்ள மன்று அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், மீண்டும் அரச தரப்பு சாட்சியப்பதிவை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஸ்ரீகஜனை கைதுசெய்ய முற்பட்டபோதும், அவர் தலைமறைவாகியுள்ளதாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஏற்கனவே குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.